Monday, November 22, 2010

ஸ்ரீ மத் பாகவத கதைகள - பாகம் 2

"ஒரு தத்துவ தரிசனம்" என்ற பெயரில், இதற்கு முன்னரே ஸ்ரீ மத் பாகவத கதைகளை வைத்து ஒரு பதிவை பகிர்வு செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.இந்த முதல் பதிவை படிக்காதவர்கள், கீழ் குறிப்பிட்ட வலை முகவரியை சொடுக்கி, வேண்டுமானால் படித்து கொள்ளலாம்.

ஒரு தத்துவ தரிசனம் - ஸ்ரீ மத் பாகவத கதைகள்



இவ்வாறு கதைகள் என்பவைகள், நடந்த ஒரு சம்பவத்தை நமக்கு அப்படியே சொல்லும் வரலாற்று பெட்டகங்களாக எனக்கு தோன்றவில்லை. அவைகள், அதன் கர்த்தாக்கள் நமக்கு சொல்ல வந்த கருத்தை சில சம்பவங்கள் மூலம் (கற்பனையாக கூட இருக்கலாம்), விரிவாக விளக்கும் ஒரு கலை எனலாம்.

"புரஞ்சனோ பாக்யானம்" மற்றும் "கஜேந்திர மோக்ஷம்" என்ற இரு பாகவத கதைகளை தொடர்ந்து, "அமிர்தம் கடைதல்" என்ற பாகவத கதையையும் இந்த பதிவின் மூலம் பகிர நினைக்கிறேன். இனி அந்த கதையை பார்ப்போம்.

அமிர்தம் கடைதல் - கதை விளக்கம்

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக, பாற்கடலை கடைந்த இந்த கதை எல்லாருக்கும் பரிச்சயம் ஆன கதை என்றே நினைக்கிறேன். எனினும், இந்த கதையை விளக்கமாக பார்ப்போம்.

ஒரு காலத்தில் துர்வாசர் என்ற ஒரு முனிவர், தேவர்களின் அரசனான இந்திரனை பார்க்க இந்திரலோகம் வந்திருந்தார். அவர், இந்திரனை கௌரவிக்கும் பொருட்டு, சிறந்த மலர்களாலும், இலைகளாலும் ஆன ஒரு மாலையை இந்திரனுக்காக கொண்டு வந்து அதை அவனிடம் கொடுத்தார். முனிவரை மிகவும் அலட்சியமாக எண்ணிய இந்திரன், யானை மீது அமர்ந்து இருந்தவாறே அந்த மாலையை வாங்கி தன்னுடைய யானையின் அணிகலன் ஆக்கினார். அந்த யானை, அந்த மலர் மாலையை தன் தும்பிக்கையால் பிய்த்து எறிந்தது. இதை பார்த்து கொண்டு இருந்த முனிவர், "நான் கொடுத்த மாலையின் அருமை தெரியாமல் அதை தன் யானைக்கு கொடுத்து தனக்கு மிகப்பெரிய அவமரியாதை செய்து விட்டான், இந்திரன்" என கடுங்கோபம் கொண்டு தேவர்களுக்கு, அவர்களின் வலிமையும், அதிர்ஷ்டமும் மறைந்து போகும்படி சாபம் அளித்தார். அந்த சாபத்தின் மூலம், தேவர்கள் மிகவும் வலிமை குறைந்தவர்கள் ஆகி விட்டனர். தேவர்கள் கை தாழும் போது, அசுரர்கள் கை ஓங்குவது இயற்கை தானே. அசுர தலைவன் "மஹா பலி" யின் படையெடுப்பில் தோற்று போனது தேவர்கள் படை. எல்லா அண்ட சராசரமும், அசுரர்கள் ஆட்சிக்கு கீழ் வந்தது. அவர்களின்  பிடியில் இருந்த சாதாரண மக்கள், துயரங்களாகவே அனுபவித்து வந்தனர்.

தோற்று போன தேவர்கள், வைகுண்டத்தில் ஒன்று திரண்டு, பகவான் விஷ்ணுவை நோக்கி பிரார்த்திக்க ஆரம்பித்தனர். இவர்களின் வலிமையை மறுபடியும் மீட்டு கொண்டு வர, அமிர்தம் ஒன்றே வழியாக இருந்தது. விஷ்ணு பகவானும், அவர்களுக்கு அமிர்தத்தை பெற்று தர, உதவ முன்வந்தார்.

பாற்கடலுக்கு இடையே அமிர்தம் ஒளித்து வைக்க பட்டு இருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன. அமிர்தம் கிடைக்க வேண்டும் என்றால், பாற்கடலை கடைந்து தான் பெறமுடியும் என்று விஷ்ணு பகவான் கூற, அதற்கான முயற்சிகள் தொடங்கின. மிகப்பெரிய "மந்தார மலை", பாற்கடலுக்கு நடுவே வைக்க பட்டது. வாசுகி என்ற பாம்பு, மந்தார மலைக்கு நடுவே கட்டப்பட்டது. மலையும் தயார். கயிறும் தயார். ஆனால், பாற்கடலை கடைவதற்க்கான சக்தி, தற்சமயத்தில் தேவர்களிடம் இல்லை. எனவே இதற்கும் தேவர்கள், மீண்டும் பகவான் விஷ்ணுவையே நாடினர். விஷ்ணு, இதற்கு அருமையான ஒரு யோசனை சொன்னார். அவர் சொன்ன யோசனை என்னவென்றால், தேவர்கள், அசுரர்களின் துணை கொண்டு, பாற்கடலை கடையலாம் என்பதே.

ஆனால், "அசுரர்கள், தமக்கு பலன் இல்லாமல், எப்படி தேவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். எப்படியும், கிடைக்கும் அமிர்தத்தில் சரி பாதி தங்களுக்கும் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பார்கள். அப்படி, அமிர்தம் அவர்களுடன் பகிரப்பட்டால், தேவர்களின் கதி, அதோகதி தான். தேவர்களின் குலம் அடியோடு நாசம் பெற்றுவிடும்". இது போன்ற சிந்தனைகள், தேவர்களுக்கு தோன்றலாயின. இதை, ஸ்ரீ மத் நாராயணனிடம் விவாதித்தனர். அதற்கு நாராயணனோ, "அது எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன். அவர்கள் சரி பாதி அமிர்தத்திற்கு கோரிக்கை வைத்தால், அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்" என்று பதில் அளித்தார். மீதி என்ன? எல்லா ஏற்பாடுகளும் தயார்.

தேவர்கள் ஒருபுறம். அசுரர்கள் ஒருபுறம். பாம்பின் தலை ஒருபுறம், பாம்பின் வால் ஒரு புறம். இப்போது புது குழப்பம்!. யார், பாம்பின் தலையை பிடித்து கடலை கடைவது? மற்றும் யார் பாம்பின், வாலை பிடித்து, கடலை கடைவது என்று. அசுரர்கள், பாம்பின் வாலை பிடித்து கடைவதற்கு தயாராக இல்லை. "பிருகு முனியின் பிள்ளைகள் நாங்கள், நாம் போய் பாம்பின் வாலை பிடிப்பதா?", என அசுரர்கள் குரல் எழுப்பினர். தேவர்கள், கொஞ்சம் அடங்கிப்போய், அவர்கள் வாலை பிடித்து கடைய முன் வந்தனர். இதில் குறிப்பு என்னவென்றால், தேவர்களும் "பிருகு" முனிவரின் பிள்ளைகள் என்பதே.

இவ்வாறு பாற்கடல் கடைய ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், மந்தார மலை, கடலுக்கு இடையில் நிலையாக நில்லாமல், அது நழுவி, கடலுக்கு அடியில் செல்ல ஆரம்பித்தது. இப்போது, பகவான் விஷ்ணு தன் மாயையின் துணையுடன் ஒரு ஆமையின் உருவம் கொண்டு அந்த மலையை தாங்கி பிடித்தார். இப்போது, பிரச்சினை இல்லாமல் கடல் கடைய ஆரம்பிக்கப்பட்டது. போக போக, மிக வேகமாக, கடல் கடையப்பட்டது. பாற்கடல் என்பது, அமிர்தத்தை மட்டும் தன் வசம் கொண்டதாக இல்லை. அது கடையப்படும் போது, ஏனைய சில பொருட்களும் வெளிவர தொடங்கின. முதலில், மிகவும் கொடிய விஷமான "ஆல கால விஷம்" வெளி வந்தது. மொத்தம் உள்ள, அனைத்து உலகங்களிலும் மிகவும் கொடிய விஷமான, இந்த விஷம், அதன் நெடி மூலமாகவே, எல்லோரையும் தாக்க ஆரம்பித்தது. தேவர்கள் பலர், இதில் மயக்கம் அடைந்தனர். மீண்டும், ஸ்ரீ மந் நாராயணனின் உதவியைதான் எல்லோரும் நாடினர். ஆனால், விஷ்ணுவோ, ஈஸ்வரனான சிவனிடம் உதவி கேட்கும்படி சொன்னார். சிவ பெருமானும், தேவர்களுக்கு உதவ முன்வந்தார். தேவர்களின் துன்பங்களை போக்க, சற்றும் யோசிக்காமல் சிவ பெருமான், அந்த ஆல கால விஷத்தை, தன் வாய் வழியே பருக ஆரம்பித்தார். பார்வதி தேவி, சிவபெருமானின் கழுத்து பகுதியை பிடிக்க, அந்த விஷம் சிவபெருமானின் கழுத்துலேயே தங்கியது. எனவே தான், சிவபெருமான், "நஞ்சுண்டேஸ்வரர், நீலகண்டர்" என்று எல்லாம் அழைக்க படுகிறார். கொடிய விஷத்தின் கொடுமை மறைந்தது. இனி, ஐஸ்வர்யங்கள், கடலில் இருந்து வெளிப்பட தொடங்கின.

விஷத்துக்கு அடுத்த படியாக, "வருணி" பகவான் வெளியே வந்தார். அவர், "மது" போன்ற போதை பொருட்களுக்கு எல்லாம் அதிபதி ஆவார். இவரை தேவர்களுடன் இணைத்து கொண்டனர்.
அடுத்து, "உச்சிஷிரவாஸ்" என்ற 7 தலை குதிரை வெளிவந்தது.
அடுத்து, "கௌச்தூபா" என்ற உயர்ந்த அணிகலன் வெளி வந்தது. இந்த அணிகலன், விஷ்ணு பகவானால் அணியப்பட்டது.
அடுத்து, சந்திர பகவான் வெளியே வந்தார்.
அடுத்து, லக்ஷ்மி தேவி வெளியே வந்தார். அவர் கடலை விட்டு வெளியே வந்ததும், விஷ்ணு பகவானுக்கு மாலை அணிவித்து, அவருக்கு துணைவி ஆனார்.
அடுத்து, "ரம்பா", "மேனகா", "புஞ்சிகத்சலா" போன்ற அதிரூப சுந்தரிகளான, அப்சரஸ் தேவதைகள் வெளியே வந்தனர்.
அடுத்து, உலகத்துக்கே படி அளக்க கூடிய "காம தேனு" பசு வெளியே வந்தது.
அடுத்து,  "பரிஜத்" என்ற வாடாத, அழியாத, மணம் குறையாத பூக்களை வழங்கும் மரமும், "கற்பகவிருக்ஷம்" என்ற, கேட்டதை அள்ளித்தரும் மரமும் வந்தன.
அடுத்து, "ஐராவதம்" என்ற வெள்ளை யானை வந்தது.
கடைசியாக, "தன்வந்திரி" என்ற ஆரோக்யத்திற்கான பகவான், "அமிர்த குடுவை" யுடன் வெளியே வந்தார்.

அமிர்தம் கிடைத்து விட்டது. இனி, தேவர்களும், அசுரர்களும், அதை பருக வேண்டியதே பாக்கி. இப்போதும் கடும் சண்டை. யார் முதலில் பருகுவது என்று. விஷ்ணு பகவான் யோசித்தார். அவர் மிகவும் அழகிய "மோகினி" என்ற பெண் வடிவம் எடுத்து, அசுரர்கள் முன் நின்றார். அசுரர்கள், மோகினியின் அழகில் மயங்கி போனார்கள். இப்போது, அவர்களுக்கு அமிர்தம் கூட, பெரிய விசயமாக தெரியவில்லை. அவர்களின் நோக்கம், எப்படியும் மோகினியை அடைவது என்பது மட்டுமாகவே இருந்தது. அவர்கள் எல்லோரும், முதல் படியாக, மோகினியை அணுகி, "எங்களுக்கு அமிர்தம் சரியாக பகிர்ந்து கொடுப்பாயா?" என கேட்டனர். காத்து கொண்டு இருந்த மோகினியோ, சரி என்று உடனே ஒத்துக்கொண்டாள். மோகினி அசுரர்களை பார்த்து, "நீங்கள் மிகவும் பலசாலிகளாக இருக்குறீர்கள். ஆனால், பாவம், தேவர்கள் மெலிந்து கிடக்கின்றனர். எனவே, முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுத்து விடலாம்" என கருத்து கூறினாள். அசுரர்களும் ஏற்றுக்கொள்ள, முதலில் தேவர்களுக்கு அமிர்தம் பரிமாறப்பட்டது. இதில் சந்தேகம் அடைந்து, தேவர்களின் உள்ளே அமர்ந்து தானும் அமிர்தம் பருகி விட்டான், அசுரனான ராகு. இதை, சூரியனும், சந்திரனும் கண்டுபிடித்து, விஷ்ணுவிடம் கூறினார். உடனே, ராகுவின் தலையை, தன் சக்ரஆயுதத்தால், வெட்டி எறிந்தார். பின், மோகினி, தன் மாயையில், அசுரர்களுக்கு அமிர்தம் கொடுப்பது போல ஒரு பிரமையை ஏற்படுத்தி, உண்மையில் அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்காமல் தடுத்தார்.

இவ்வாறு, அமிர்தம் கடையப்பட்டு, தேவர்கள் பலன் அடைந்தனர்.

அமிர்தம் கடைதல் - கதை அலசல்

இந்த கதையை கேட்கும் போது, எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அவை,
  • ஏன், அசுரர்கள் எப்போதும் தேவலோகத்தையே குறி வைத்து தாக்குகின்றனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஒரே தந்தை தான் என்றால், அவர்களுக்குள் ஏன் இவ்வளவு பகை மற்றும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?
  • தேவர்கள் நாராயணனிடம் வந்து வேண்டினால் மட்டுமே, அவர் உதவ முன் வருவது ஏன்?
  • ஏன், எல்லா கடவுள்களும், தேவர்களை மட்டுமே ஆதரிக்கிறது. "ராவணன், ஹிரண்ய கசிபு" போன்ற அசுரர்கள், கடுமையான தவம் செய்து மட்டுமே வரங்கள் வாங்கியவர்கள். அவர்களின் பக்திக்கு மெச்சியே, வரங்கள் அளிக்க பட்டு உள்ளதாக கதைகள் சொல்கின்றன. இப்படி, பக்தியில் தேவர்களை மிஞ்சும் அசுரர்களை, ஏன், விஷ்ணுவோ, சிவனோ அழிக்க நினைக்க வேண்டும்?
  • எப்போதும் அகங்காரம் கொண்டு தவறுகள் செய்யும், தேவர்களை மட்டும், ஏன் கடவுள் திருத்துவதே இல்லை? அவர்கள் மீது மட்டும் ஏன் இந்த கரிசனம்?
  • உண்மையில், இது போன்ற கதைகள், இன்றைய கால கட்டத்துக்கும் தேவை தானா? நாகரீகமான, இன்றைய கால கட்டத்திலும், தேவர்கள், அசுரர்கள் போன்ற கற்பனையான கதாபாத்திரங்களை முன்னிருத்தியே, நம்முடைய தலைமுறை கடவுள் கதைகளை புழங்க வேண்டுமா?
இந்த கேள்விகளில் சிறிது நாத்திகம் தென்பட்டாலும், இந்த கேள்விகள், பலருடைய மனதில் ஏற்பட்டு, வெளியே கேட்கப்படாமல் இருக்கலாம் என்றே கருதுகிறேன். குறிப்பாக, சிறுவர்களுக்கு இது போன்ற கதைகள் வெறுமனே திணிக்கப்பட்டு அதன் மூலம் அவர்களின் அறிவு கேட்கும் கேள்விகள், பதில் அளிக்கப்படாமலேயே, அவர்களை கட்டாயமாக பக்திக்கு செலுத்துகிறோம் என்றே தோன்றியது. இந்த கேள்விகளுக்கு விடை காணும் முயற்சி, ஓரளவில் வெற்றி பெற்றது என்றே கூற வேண்டும். இந்த கதை மற்றும் கேள்விகளுக்கான, வித்தியாசமான அலசலை இனி காண்போம்.

இந்த கதையில் வரும் எல்லா கதா பாத்திரங்களும், ஏதோ ஒரு உள் அர்த்தத்தை விளக்கும் பொருட்டே அமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும், ஒரு உருவகம் என்றே நினைக்கிறேன். அதன் விளக்கங்கள்,

இந்திரன் - இந்திரியங்கள் (உடல் மற்றும் உறுப்புகள்)
தேவர்கள் - நல்ல பண்புகள்
அசுரர்கள் - கெட்ட பண்புகள்
துர்வாசரின் மாலை - சான்றோர்கள் கருத்து.
இந்திரனின் யானை - புலன்கள்
விஷ்ணு பகவான் - ஆத்மா
பாற்கடல் - மனது
பர்வத மலை மற்றும் வாசுகி பாம்பு - சாட்சி மாத்திரமாக, மனதை அலச உதவும் சாதனங்கள்.
ஆமை (கூர்மம்) - புலன்களை அடக்கும் யுக்தி
ஆல கால விஷம் - காம இச்சைகள்
சிவபெருமான் - குரு
மகாலட்சுமி - ஐஸ்வர்யம்(செல்வங்கள்) மற்றும் மகிழ்ச்சி
மோகினி - புலன் இன்ப விஷயம்
அமிர்தம் - முக்தி (சமாதி) நிலை.

எப்போது எல்லாம், துர்வாசர் போன்ற சான்றோர்களின் சொல்படி கேளாது, அவர்கள் நமக்கு அளிக்கும் மலர்மாலை போன்ற அறிவு புகட்டும் சான்றுகளை, நம் மனம் மற்றும் உடல்(இந்திரன்) புறக்கணிக்கிறதோ, அப்போது, அது தன் நிலை தாழ்ந்து கீழான நிலையை அடைகிறது. தன் உண்மையான பலம் தெரியாது, மிகவும் பலவீனம் அடைகிறது. தனக்கு எதனால் இந்த பலவீனம் என தன்னை(ஆத்மா) தானே விளக்கம் கேட்டுக்கொள்ளும் போது, பகவான் விஷ்ணு(ஆத்மா) விடம் இருந்து நமக்கு ஆலோசனை கிடைக்கிறது. உடல் மற்றும் மனம் நாடும் விஷயங்கள் மூலமாகவே நமது பலவீனம் உற்பத்தி ஆகிறது. எனவே, முக்தி என்னும் அமிர்த (என்றும் அழியாத) நிலைக்கு, அவர் நம்மை தூண்டுகிறார். அதற்கு, நம் மனது கடையப்பட வேண்டும்.

மனதை கடைதல் என்பது, வெறுமனே நடத்தி விட முடியாது. நம் புலன்களை அடக்காமல் மனதை ஆராய்வது(கடைவது) என்பது,
இயலாத காரியம். நம்முடைய 5  புலன்களையும் (ஆமை எப்படி தன் உடலை, தன் ஓட்டில் மறைக்கிறதோ அப்படி) அடக்கி இதை செயல்படுத்த வேண்டும். புலன்கள் அடக்கப்படும் போது தான், மனது ஒழுங்காக கடையப்படுகிறது. ஆக கட்டுப்பாடு என்னும் கூர்மம்(ஆமை), மனதில் உருவாகும் போது தான், அதன் கடைதல் நிகழ்ச்சி வெற்றி பெரும்.

நம் மனதில், நல்லவை, கெட்டவை என்று எல்லா எண்ணங்களும் ஒளிந்து கொண்டு, அது கடையப்படும் போது, ஒவ்வொன்றாக வெளிவருகிறது. முதலில், நம் மனதில் உள்ள, காம இச்சைகள் (ஆல கால விஷம்) ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதனால், நம் நல்ல பண்புகள் (தேவர்கள்) எல்லாம் மயக்கமடைகின்றனர். எனவே, உடல் மற்றும் புத்தி இந்த, காம இச்சைகளிடம் சிக்கி, துன்புறுகிறது. எனவே, "குரு" என்னும் தக்ஷிணா மூர்த்தியான சிவபெருமான், நமக்கு கண்டிப்பாக தேவை. அவர், நம் காம இச்சைகளை அடக்கி, நம்மை அந்த ஆல கால விஷத்தில் இருந்து காத்து அருள்வார். பின் போதையை (மயக்கத்தை) அளிக்கும் வருணி பகவான் வெளிவருகிறார். அவர், இந்த மனதை கடையும் செயலே தேவை அற்றது என்ற மயக்கத்தை தந்து, நல்ல மற்றும் கெட்ட குணங்களின் செய்கைகளை நிறுத்த முற்படுவார். நம் செயல்களை குறைப்பது என்பது அடுத்த நிலை. இந்த போதையில்(மயக்கம்) மட்டுமே சிக்காமல், அடுத்தும் மனது அலச(கடைய)ப்படும்   போது, மற்ற சில நல்ல குணங்களும் வெளிப்படுகின்றன. அடுத்து, "மகா லக்ஷ்மி" வெளிவருகிறாள். அதாவது, எல்லா செல்வங்களும், மன திருப்தியும் அடுத்ததாக, நமக்கு கிடைக்கிறது. செல்வங்கள் அனைத்தும், தேவர்களிடமோ (நல்ல குணங்கள்), அசுரர்களிடமோ (கெட்ட குணங்கள்) சிக்கி விடாது. அவை, தற்காலிகமாக, ஒருவரிடம் இருப்பது போலோ, இல்லாதது போலோ காட்சி அளித்தாலும், உண்மையில் எல்லா செல்வங்களும், பகவானுக்கே சொந்தம். அதுவே, நாராயணன், லக்ஷ்மியை மணப்பது. இறுதியில், அழியாத இன்பமான "முக்தி (சமாதி)" நிலை நம்மை அடையும். ஆனால், அப்போதும், சில கெட்ட குணங்கள் (ராகு போன்றவர்கள்), தேவ வடிவில் காட்சி அளித்து, அதை அடைய விடாமல் தடுக்க நினைக்கும். இதையும் பகவானிடம் முழுவதுமாக சரண் அடைந்து விட்டால், அவர் அதை வெட்டி எரிந்து விடுவார். பின்னர், மோகினியாகவும் இருந்து, அழியாத முக்தி நிலையினை, தேவர்களுக்கு மட்டுமே கொடுத்து அருள்வார்.

இதில் அமிர்தம் என்பது, முக்தி நிலை என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது, நிலையான வாழ்க்கை என்றும் பொருள் கொள்ளலாம். ஆசைகளில் அகப்படாத, "மனம், உடல், புத்தி, பிராணன்" போன்ற நிலை இல்லாத பொருட்களை அடக்கி ஆள தெரிந்த ஒரு நிலை எனவும் கொள்ளலாம். முதலாளியான நம் ஆத்மா, அதன் அடிமைகளான, "உடல், மனம், புத்தி, பிராணன்" ஆகியவற்றை அடக்கி ஆள்வது என்பது எப்பேறு  பட்ட உன்னத நிலை?

இந்த கதையின் அலசல், என் தற்காலிக ஆன்மிக தேடுதலுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தது. இந்த கதை, ஒரு மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை நமக்கு விளக்குவதற்காக, இலைமறை பொருளாய், நமக்கு வியாச பெருமானால் வழங்க பட்டதாக கருத தோன்றியது. இந்த கதையின் உட்கருத்து ஆராய்ச்சி மூலம், மேல் குறிப்பிட்ட, என்னுடைய சந்தேகங்களுக்கு, ஓரளவு பதில் கிடைப்பதாக கருதுகிறேன்.

அதாவது, கெட்ட குணங்களான அசுரர்கள், தேவலோகம் என்னும் தேவர்கள் (நல்ல குணங்கள்) வாழும் பகுதியையே முதலில் தாக்குகின்றனர்.

கெட்ட குணங்களும்(அசுரர்களும்), நம் மனதின் ஒரு பகுதி என்பதால், நம் மனம் மற்றும் புத்தி, இறைவனை (இதயம் அல்லது ஆத்மா)  சென்று கேட்காதவரை, இறைவன் அவர்களுக்கு துணை நிற்க வருவதில்லை.

நல்ல குணங்கள், மற்றும் கெட்ட குணங்கள் இரண்டுமே உற்பத்தி ஆன இடம் மனது தான். எனவே, இருவருக்கும் ஒரே பெற்றோர்களே!

தேவர்கள் (நல்ல குணங்கள்), தான் செய்யும் நன்மையின் விளைவை எண்ணி அகங்காரம் கொண்டாலும், அதன் விளைவு பிறருக்கு தீமை அளிப்பதில்லை. மாறாக, அதன் பண்பே அடிபடுகிறது. எனவே, இவர்கள், கடவுளுக்கு எதிரிகளாக கருதுப்படுவது இல்லை. அசுரர்கள், என்ன தான், பக்தியில் தேவர்களை மிஞ்சினாலும், அவர்கள் காரணம் கருதியே பக்தியில் ஈடுபடுகின்றனர். எனவே, கடவுள் இடத்தே, ஒரு ஆத்ம சம்பந்தம் அசுரர்களிடத்தில் உண்டாவது இல்லை.

இவ்வாறான கதைகள், வெறும் கற்பனை கதாபாத்திரங்களின் கோர்வை என்ற கருத்து இருக்கும் வரை, இவைகள் இன்றைய தலைமுறைக்கு தேவை அற்ற ஒன்றாகவே கருத தோன்றும். ஆனால், உள்ளார்ந்த கருத்துக்கள் என்னவென்ற ஆராய்ச்சி, அதை மாற்றிவிடும்.

இவ்வாறாக, என் சந்தேகங்களுக்கு, நானே விடைகளை தேடி கொண்டேன்.


இந்த கதை விளக்கங்கள், என்னுடைய வாழ்க்கை பயணத்தில், ஒரு சிறு தெளிவை தந்துள்ளதாக கருதினேன். எனவே தான், இதை உங்களிடமும் இந்த பதிவு மூலம் பகிர்ந்து கொண்டேன்.

இந்த கதை விளக்கம், ஆன்மீக வாதிகளின் நம்பிக்கைக்கு முரண்பட்டதாக தோன்றலாம். ஆனால், இதன் மூலம், யாருடைய மனதையும் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. அவ்வாறு நிகழ்ந்து இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.

எல்லாம் வல்ல இறைவா போற்றி...

Search This Blog