Wednesday, September 14, 2011

மகிழ்ச்சிக்கான தேடல்கள்!!!


மகிழ்ச்சி (அ) ஆனந்தம் என்பது நாம் எல்லோருமே விரும்பி அனுபவிக்கும் ஒரு உணர்வு. இந்த மகிழ்ச்சி என்ற ஒன்றை தேடி தான் மனிதன் மட்டும் அல்லாது, எல்லா உயிர்களும் அலைந்து கொண்டு இருக்கின்றன. ஆனந்தம், மகிழ்ச்சி என்று இவைகளுக்காக தான், மனிதன் இடைவிடாது போராடி கொண்டு இருக்கிறான். அதற்காக, அவன் படும் பெரும் கஷ்டங்களும், அவன் அனுபவிக்கும் சிறு மகிழ்ச்சிக்கு பின்னால், சூரிய ஒளி பட்ட பனித்துளி போல மறைந்து, மீண்டும் புத்துணர்ச்சியாகி விடுகிறது. மீண்டும் அவன் கஷ்டப்பட துணிகிறான், மகிழ்ச்சியை அடையும் நோக்கத்தில்...

இன்றைய சூழ்நிலையில் நாம் எத்தனையோ விஷயங்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்கிறோம். பிறப்பு-இறப்பு என்ற இரு பெரும் நிகழ்வுகளுக்கு இடையில், நாம் நம்மை காத்துக்கொள்ள எத்தனையோ விதங்களில் போராடுகிறோம். இடையில் "பணம்" என்ற ஒரு அரிய கண்டுபிடிப்பின் பிடியில் மாட்டியும் கொண்டிருக்கிறோம்.

பண்டைய காலத்தில், உணவு பொருட்களை உற்பத்தி செய்வோருக்கும், பிற பொருட்களை உற்பத்தி செய்வோருக்கும் இடையில் பண்டமாற்றம் என்ற முறையில் பரிமாற்றம் நடந்து வந்துள்ளது. பின், பொதுவான பொருள் ஒன்றை நடுநிலை பொருளாக வைத்து, அதற்கு ஏற்றவாறு பரிமாற்றப்படும் பொருட்களுக்கு மதிப்பு(Value) நிர்ணயிக்க பட்டு வந்துள்ளது. நடுநிலை பொருட்களாக தங்கம், வெள்ளி, அலுமினியம் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்க "பணம்" என்ற ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது. இந்த பணம் பொருட்களின் மதிப்பை நிர்ணயிக்கும் பொதுவான ஒரு நடுநிலை பொருளாக அறிமுகப்படுத்தபட்டது. இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடுப்பு... இது, "சேமிப்பு" என்ற அரிய எண்ணம் ஒன்றை நமக்கு அறிமுகம் செய்து வைத்தது. இன்று உழைத்தால், இன்று அனுபவிக்கலாம் என்ற நிலை போய், இன்று கடுமையாக உழைத்தால், நாளையும் அனுபவிக்கலாம் என்ற ஒரு புதிய யுத்தியை இது அறிமுகம் செய்தது. மனிதன், இதில் ஈர்க்கப்பட்டான். நாளைய மகிழ்ச்சிக்கு, மனிதன் இன்றே வித்திட நினைத்தான். எதிர் காலத்தில் சுகம் காண்பதற்கு, நிகழ் காலத்தில் துயரப்படவும் துணிந்தான்...

பணம் தேடி அலைந்தோம். பணம் தேடி அலைகிறோம். இனியும் பணம் தேடி அலைவோம்...

சரி, பணம் தான் மகிழ்ச்சியின் அடிப்படை என்றால், பணம் படைத்தவன் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நம்மால் உறுதியாக கூற முடியுமா? முடியாது என்றே கருதுகிறேன்.

பணத்தை, ஒரு கருவி என வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். அந்த கருவியை கொண்டு, அவன் ஏதோ மற்றொன்றை பெற்று அதில் மகிழ்ச்சி அடைய விரும்புகிறான்.

என் பார்வையில், மகிழ்ச்சி அடையும் குறிக்கோளுடன் தேடப்படும் வெளி விஷயங்கள் கீழ்கண்டவைகளாக இருக்கலாம் என கருதினேன். அவைகள்,
  • சொந்த வீடு/நிலம் (அடிப்படை வசதிகள்)
  • வாகனங்கள்
  • போதை தரும் பொருட்கள்
  • ருசியான உணவு (மாமிசம்/சைவம்) 
  • பிறருடைய புகழ்ச்சி
  • நல்ல ஓய்வு
  • காமம் மற்றும் கவர்ச்சிக்காக பெண்கள்/ஆண்கள்.
  • அடுத்தவர்களை கவரும் உடைகள்/ஆபரணங்கள்/அழகு சம்பந்தப்பட்ட பொருட்கள்
  • பிறர் பொறாமை படும் படியான ஒரு வாழ்க்கை
  • அரிய பொருட்களின் சேர்ப்பு
மேல்குறிப்பிட்ட விஷயங்களின் தேவைகள், நம் வாழ்க்கைக்கு தேவைப்படலாம். ஆனால் அடிப்படை தேவையை தாண்டி செல்லும் போது அதை ஆடம்பரம் என எடுத்து கொள்ளலாம். 

இந்த வெளித்தேவைகள் பூர்த்தி அடைவதை தாண்டி, நாம் மூன்று வகையான மனிதர்களை பார்க்க முடியும். தன் இலக்கை அடைந்தாலும், அடையா விட்டாலும் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பவன். அல்லது, எப்போதும் சோகமாகவே இருப்பவன். அல்லது எப்போதும் அடுத்தவனை குறை சொல்லியும், புலம்பிக்கொண்டும் இருப்பவன். 

இதில் முதல் மற்றும் இரண்டாம் வகையறாக்கள், கொஞ்சம் பாதுகாப்பானவர்கள். ஆனால் புலம்பி தீர்க்கும் மூன்றாம் வகையை சேர்ந்தவர்கள் சற்று அபாயகரமானவர்கள். அவர்கள், பிறரையும் குழப்பம் அடைய செய்து, அவர்களின் நிம்மதியையும் குலைத்து விடுபவர்கள். சரி, என்னதான் அடுத்தவன் குழப்பினாலும், நம் உள்ளும் அதே கருத்து இருந்தால் தானே குழப்பம் வரும் !!!

சரி அடுத்து, இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என எனக்கு தோன்றினாலும், அது அடுத்த சில நாட்களில் மறைந்து ஏதோ ஒரு வகையில் சோகம் வந்து விடுகிறது. காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே !. உண்மையில் நிரந்தர மகிழ்ச்சி என்பது கிடைக்க பெறாத ஒன்று என்றே நினைக்க தோன்றுகிறது. கிடைக்கும் மகிழ்ச்சியை எப்படியாவது தக்க வைத்து கொள்ள முடியுமா? 

மகிழ்ச்சி என்பது எதனால் எனக்குள் நிகழ்கிறது? மகிழ்ச்சிக்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்க முடியும்? 

நான் நினைத்த அல்லது எதிர்பார்த்த ஒன்று நினைத்த படி நடந்து விடுவதனால் தான் என்று தோன்றியது. அல்லது, என் நான் எதிர் பாராமல் ஒன்று, என் மனதுக்கு பிடித்தவாறு நிகழ்வதால் இருக்கலாம். அல்லது என் மனம் கற்பனை செய்து கொண்ட எதிர்பார்ப்பின் சாயலாக இருக்கும் போது... 

ஆன்மீக மார்க்கத்தில், இந்த கேள்விக்கு ரமண மகரிஷி சொல்லும் ஒரு வித்தியாசமான பதில் என்னவென்றால், 

"ஆன்மா(உயிர்) என்பது எப்போதும் ஆனந்தமயமானது. இந்த ஆனந்த சொரூபமான ஆத்மாவை, மனதில் உள்ள எண்ணங்கள் அல்லது ஆசைகள் மறைத்து நிற்கின்றன. ஒரு ஆசை நிறைவேறும் பொழுது, அந்த ஆசைக்கான இடம் நம் மனதில் இருந்து காலியாகிறது. ஆத்மாவை மறைத்து வந்த ஆசை ஒன்று, நம் மனதை விட்டு விலகியதால், அந்த வெற்றிடம்(space) வழியாக, நம் ஆத்மாவின் சொருபமான ஆனந்தம் வெளிப்படுகிறது. உண்மையில், ஆனந்தம் அல்லது மகிழ்ச்சி எங்கோ வெளியில் இருந்து வருவது அல்ல. அது உண்மையில் நம் ஆத்மாவில் அல்லது இருதயத்தில் இருந்து வெளிப்படுவது." 

இந்த கருத்து என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் மகிழ்ச்சி என்பது நம் உள்ளிருந்து உணரப்படுவது மட்டுமே... நான் விரும்பும் எண்ணங்களும், அதற்கு நான் அடைந்த ஒன்றினை என் மனம் ஏற்கும் நிலையும் தான், எனக்கு சந்தோசமாக காட்டப்படுகிறது என தோன்றியது. 

நான் சந்தோசம் என்று நினைக்கும் ஒரு எண்ணம், மற்ற ஒருவனுக்கு துக்கமாக கூட தோற்றம் அளிக்கலாம். என்னுடைய ஆசைகள் எப்படி அடுத்தவனுக்கும் இருக்க முடியும்? ஆக சந்தோசம் என்பது அவன் அவனுடைய தனிப்பட்ட (personal) ஒரு விஷயம். 

அடுத்ததாக, ஏன் நமக்கு கிடைத்த சந்தோசம், நம்மை விட்டு விரைவில் மறைந்து விடுகிறது? இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும்? 
  • நாம் எதிர் பார்த்த ஒன்று நமக்கு கிடைத்து, ஆனால் நாம் எதிர் பார்த்த அளவுக்கு திருப்தி படுத்தாமல் இருக்கலாம் (இந்த கருத்து சம்பந்தமாக, என்னை மிகவும் கவர்ந்த ஒரு வாக்கியம்: "Expectation is the entry door for all of our sorrows").
  • நம் மகிழ்ச்சியில், அடுத்தவர்களுடைய திணிப்பு கலந்திருக்கலாம். 
  • நாம் அடைய விரும்பும் ஒன்று, உண்மையில் நம்முடைய விருப்பமாக இல்லாமல் இருக்கலாம் [உதாரணம்: நாம் தேர்ந்தெடுக்கும் படிப்பு/தொழில்]. "எல்லோரும் இதை தான் விரும்புகிறார்கள்" என்று, நம் உண்மையான விருப்பத்தை புறம் தள்ளும் விஷயமாகவும்  இருக்கலாம். ஆனால், அந்த விஷயம் அடையப்பெற்றாலும், அது நமக்கு உண்மையான மகிழ்ச்சியை தராமல் இருக்கலாம்.
  • நாம் அடைந்த ஒன்று உண்மையில் நமக்கு திருப்தி அளித்தாலும், நம்மை சுற்றி இருக்கும் நபர்களின் பார்வையில் அது ஒரு அதிருப்தியாக காட்டப்படும் போது, உண்மையில் நம் அனுபவம் தவறானது தானோ என்ற ஒரு சந்தேகத்தினால் இருக்கலாம். 
  • நாம் அடைந்த ஒரு விஷயம், நாம் அடைந்ததை விட, அதிகமாக அடுத்தவனுக்கு கிடைத்து விட்டது என்ற பொறாமை கலந்த ஒப்பீட்டீனால் இருக்கலாம் [உதாரணம்: சம்பள உயர்வு]. 
  • "நாம் முதலில் விரும்பியது என்ன?, கிடைத்தது என்ன?" என்ற ஒப்பீடு மட்டும் இல்லாமல், ஒரு இலக்கை அடைந்த பின்னர், புதிய ஒரு விருப்பத்தின் தலையீடாக இருக்கலாம். 
    மகிழ்ச்சி நம்மிடம் நிலையாக தங்காததற்கு காரணங்களாக, இவைகளே எனக்கு தோன்றின.


    உண்மையில் யோசித்து பாருங்கள்... மகிழ்ச்சி என்பது, நம் தனிப்பட்ட ஆசைகளின் அடைதலால் மட்டும் ஏற்பட்டு விடுகிறதா? இதில் எத்தனை பேரின் குறுக்கீடுகள்!. "என் தங்கை, என் அண்ணன், என் பெற்றோர், என் சமூகம்" என எத்தனை குறுக்கீடுகள் இதில் பிண்ணி பிணைந்துள்ளன!. "நான் எனக்காக மட்டுமே வாழ்கிறேனா" என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டால், உண்மையான பதில் என்னவாக இருக்கும்? இல்லை என்பதை தவிர... 


    இதில் என்னுடைய நிலைப்பாடு, "என் மகிழ்ச்சியை தீர்மானிக்கும் உரிமை, என்னிடம் மட்டுமே இருக்க வேண்டும்" என்பது அல்ல. கண்டிப்பாக, நம்மை சுற்றி இருக்கும் சமூகமும் இதில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. நான், மகழ்ச்சி அடைய, நான் எதை வேண்டுமானாலும் செய்து விட முடியாது. அது கூடவும், கூடாது. சில கட்டுப்பாடுகள் கண்டிப்பாக நமக்கு தேவை, என்பதே என் கருத்து. 

    "உண்மையில், என் வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன?" என சில சமயம், நான் யோசிப்பது உண்டு. என் வாழ்க்கையின் குறிக்கோள் - "அறிவா?, ஆன்மிகமா?, பணம் அல்லது சொத்துக்களா?, உடல்நலமா?, புகழா?, காமமா?, சொந்தங்களா?, நட்புகளா?, கருணையா? அல்லது தியாகமா?", என பல முறை என்னை நானே கேட்டுக்கொள்வது உண்டு. ஆனால், ஒவ்வொரு தருணத்தில், ஒவ்வொரு பதில்கள் சரி என எனக்கு படும். இதற்கு, சரியான பதில் இது வரை எனக்கு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

    என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்றே எனக்கு சரி வர தெரியாமல், என்னுடைய உண்மையான மகிழ்ச்சி என்ன என்பதை, என்னால் எப்படி கண்டு கொள்ள இயலும்? இந்த கேள்வி, என்னை மேலும் சிந்திக்க வைத்தது.

    நேற்று வரை ஆனந்தம் அளிக்கும் விஷயம் என நான் தீவிரமாக இறங்கிய செயல்கள், இன்று எனக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன. இன்றைய தீவிரமான செயல்கள், நாளைய சலிப்புக்கு உள்ளாகலாம். உண்மையில் அவைகள், ஒரு தற்காலிக ஆனந்தத்தை தான் தருவதாக தெரிகிறது. எப்போதுமே, மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள் கிடையாதா?

    உடல், மனம், புத்தி மற்றும் ஆத்மா என, நம்மின் பல்வேறு பிரிவுகளை, நமக்கு பகவத் கீதை, உபநிஷத்கள் போன்ற நூல்கள் சொல்கின்றன. இவற்றில், மனம் மூலம் அடைய விரும்பும் எண்ணங்கள், தற்காலிகமாக அதாவது சிற்றின்பமாக இருக்கும் என்பதே, எனக்கு இந்த நூல்களின் வழியாக அறியப்படும் விஷயம். மேலும் நிலையான இன்பங்கள் ஆத்மா(உயிர்) மூலமாக அனுபவிக்க படும், என்பதும் இந்த நூல்களின் மூலம் அறியப்படும் விஷயம். இந்த விஷயங்கள், என் கேள்விக்கு ஏதேனும் வகையில் உதவுமா?

    சமீபத்தில், எனக்கு ஒரு மின்னங்கள் (Forward mail) ஒன்றில், ஆத்ம குணங்கள் என்று, ஒரு பட்டியலை கிடைக்க பெற்றேன். அவைகள்,

    ஆத்ம குணங்கள்:

    1. கருணை
    2. பொறுமை
    3. பேராசையின்மை
    4. பொறாமையின்மை
    5. நல்லனவற்றில் பற்று [உறுதி]
    6. உலோபத்தன்மையின்மை
    7. மனமகிழ்வு (கிடைக்க பெற்றவைகளை வைத்து மகிழ்தல்)
    8. தூய்மை


    ஆத்மாவின் வழியாக, நிலையான இன்பத்தை அடைய முடியும் என்றால், மேல் குறிப்பிட்ட, ஆத்ம குணங்களை வளர்த்து விடும் செயல்கள் நம்மை, பேரின்பத்திற்கு அழைத்து செல்லுமா?   


    என் மனம், என்னை தவறு செய்தேனும், சில விசயங்களை மகிழ்சிக்காக, அடைய சொல்கிறது. ஆனால், தவறுகளின் பின் விளைவுகளை, எனக்கு அது எடுத்து உரைப்பதில்லை. இப்படி, மனம் சொல்லும் வழி எல்லாம் செல்லும் ஒருவனின் நிலை, மிகவும் பரிதாபகரமாக முடியலாம் என்பதற்கு பல சான்றுகளை நான் கண்டுள்ளேன். இருந்தும் சில சமயங்களில், என் மனம் கட்டுப்பட மறுக்கிறது. அந்த ஆசைகளின் அடித்தளத்தில், என்னில் துன்பங்கள் வளர ஆரம்பிக்கிறது. முடிவு - விரக்தி. 


    அனால், உயிரின் குணங்கள் என்று மேற் பட்டியலிடப்பட்ட விசயங்களை அடையும் முயற்சிக்கு, தவறுகள் துணை நிற்காது என்றே கருதுகிறேன். துன்பங்களுக்கான அடித்தளம் சரியாக இல்லாத நிலையில், அவைகள் எப்படி என்னை பற்றி கொள்ள முடியும்? அதாவது, உயிரின் தேவைகளை பூர்த்தி செய்யும் செயல்கள் தான், நம்மை நிலையான மகிழ்ச்சிக்கு அழைத்து செல்லும் என்பதே இதன் கருத்து.


    உண்மையில், துன்பங்கள் இல்லாத பேரின்பத்தை நோக்கியே நாம் எல்லோரும் பயணிக்கிறோம். ஆனால், அதற்கான வழி தான், நமக்கு சரி வர தெரிவதில்லை. 


    நம்முடைய மகிழ்ச்சியை நாமே வளர்த்துக்கொள்ள முடியா விட்டாலும், குறைந்த பட்சம் பிறருடைய மகிழ்சிக்காவது தடை இல்லாமல் நிற்போமே...


    மகிழ்ச்சி பற்றி, என் மனதில் படும் சில கருத்துகளை உங்களிடம் பகிர்வதே, இந்த பதிவின் நோக்கம். யாருடைய மனதையும் புண்படுத்துவதோ அல்லது, யாருடைய நம்பிக்கையும் குலைப்பதோ அல்ல. 

    Search This Blog