Friday, September 17, 2010

ஒரு தத்துவ தரிசனம் - ஸ்ரீ மத் பாகவத கதைகள்

கதைகளை பார்ப்பதும், படிப்பதும், கேட்பதும் மற்றும் சொல்லுவதும் நமது முன்னோர் நமக்கு கற்று தந்த பாடங்களில் மிகவும் அனுபவ பூர்வமானவைகள். அறிவுரைகளையோ அல்லது சிறந்த செய்திகளையோ வெறுமனே மற்றவர்களுக்கு சொல்லும் போது அவை வெகுவாக ஈர்ப்பதில்லை. அதையே கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு கதையாக்கி, சொல்லும் பொழுது மனதில் வெகு விரைவில் பதிகிறது. சிறுவயதினருக்கு, ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் ஒரு நுட்பமான கருவிகளாக இந்த கதைகள் இருந்து வருகின்றன. பண்டைய காலம் தொட்டே, கடினமான அல்லது முக்கியமான ஒரு விஷயத்தை எளிதாக மற்றவர்களுக்கு கதைகள் மூலம் விளக்கும் கலையை நம் முன்னோர்கள் நன்கு கற்று அறிந்திருக்கிறார்கள். புராணம், இதிகாசம் போன்றவைகள் இதற்கு நல்ல உதாரணங்கள். கதைகள், குழந்தைகளை தூங்க வைப்பதோடு  நில்லாமல், தூங்கி கொண்டு இருக்கும் சில நல்ல உணர்வுகளையும் தட்டி எழுப்பும் பொறுப்பையும் கொண்ட கலைகள் என்றே சொல்லலாம்.

உலகில் உள்ள எல்லா மதங்களும், "கதைகள்" என்னும் கலையையே கையில் எடுத்து அவற்றை பரப்பி வந்துள்ளன. பல முனிவர்கள், நமக்கு கற்று கொடுக்க விரும்பிய வாழ்க்கை பாடங்களை கதைகளாக்கி  அதன் மூலம் தான் கூற விரும்பும் கொள்கைகளையும், நெறி முறைகளையும் கூறி வந்துள்ளனர். இதில் இந்து மதத்தில், "வியாசர்" என்னும் முனிவர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார். "மஹா பாரதம்" என்ற இதிகாசத்தையும், 18 புராணங்களையும் நமக்கு அளித்ததோடு அல்லாமல், வேதங்களையும் செவ்வனாக 4 பிரிவுகளாக பிரித்து வழங்கிய பெருமையும் உடையவர். அவர் எழுதிய மற்றும் புராணங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த புராணமாகவும்  கருதப்படும் "ஸ்ரீ மத் பாகவதம்" என்னும் புராணத்தில் வரும் "புரஞ்சரனோ பாக்யானம்" மற்றும் "கஜேந்திர மோக்ஷம்" என்னும் கதைகளை நான் ஒரு ஒலி நாடாவில் சமீப கால கட்டத்தில் கேட்டு அறிந்தேன். அந்த கதைகள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன கதைகளாக இருப்பினும், ஒரு புதிய கோணத்தில் அந்த கதைகள் அலசப்பட்டு இருப்பதை நான் உணர்ந்தேன். அதை இந்த பதிவு மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்.


1) புரஞ்சரனோ பாக்யானம்

புரஞ்சரனோ பாக்யானம் என்ற இந்த கதையை ஒரு சிலர் மட்டுமே அறிந்து இருக்கக்கூடும் என கருதுகிறேன். இந்த கதையை "நாரத மகரிஷி" விளக்கம் அளிக்கும் கதையாக வியாசர் சித்தரித்து உள்ளார். இனி கதையை பார்ப்போம் (இல்லை படிப்போம்).

முன்பொரு காலத்தில் "புரஞ்சரன்" மற்றும் "அவிக்ஞானன்" என்ற இரு பேர்கள், இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர். புரஞ்சரனை காட்டிலும், அவிக்ஞானன் சிறந்த ஞானத்தை உடையவனாக இருந்தான். அவர்கள் இருவரும் எந்த விதமான கவலையும் இன்றி ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வந்தனர். ஒரு நாள், அவர்களுடைய பயணத்தின் இடையில் ஒரு அழகான ஊரை பார்த்தனர். "9" வாசல் கோட்டைகளை கொண்டு, அந்த ஊர் கம்பீரமாக காட்சி அளித்தது. அங்கே, மிகவும் அழகான ஒரு பெண், 5 தலை நாகத்தை குடையாக கொண்டு, அம்சமாக நடந்து வரும் காட்சியை கண்டனர். அந்த நகருக்கு ராணியான அவளின் அழகில் "புரஞ்சரன்" மயங்கி போனான். அவளை கல்யாணம் செய்து கொண்டு அந்த நகரத்திற்கு ராஜாவாகி, அங்கேயே தங்கி விடுவது என்று முடிவு செய்தான். புரஞ்சரனை கண்ட அந்த ராணியும், அவன் அழகில் மயங்கி போனாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி, முழு மன திருப்தியுடன் வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத நண்பன் "அவிக்ஞானன்", இதனை கண்டு மிகவும் ஆச்சர்யம் அடைந்தான். தன் நண்பன் புரஞ்சரனிடம், "நன்றாக யோசித்து கொள் நண்பா, இது உண்மையிலேயே உனக்கு தேவை தானா?" என்று கேட்டான். ஆனால் புரஞ்சரனின் அளவு கடந்த ஆசையை கண்டு, நண்பன் அவிக்ஞானன், அவனுக்கு அந்த ராணியை மனம் செய்து வைத்து விட்டு, தனியாக புறப்பட தயார் ஆனான். இப்படி புரஞ்சரனுக்கும், அந்த அழகு மங்கைக்கும் திருமணம் நடந்தது.

அவர்கள் நீண்ட காலம் வெகு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அந்த ராணி, எதை சொன்னாலும் மறுக்காமல் அதை புரஞ்சரன் செய்து வந்தான். இடையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் மனைவியிடம் சொல்லாமல் வேட்டைக்கு சென்று வந்தான். அதை கேள்வி பட்ட ராணி, தலைவிரி கோலமாய் கூச்சலிட ஆரம்பித்தாள். "தன்னிடம் கேட்காமல் வேட்டைக்கு மட்டும் அல்ல, இனி எதையும் செய்ய கூடாது" என அழுது ஆர்ப்பாட்டம் இட்டாள். திகைத்து நின்ற புரஞ்சரன், "இனி உன்னை கேட்காது எதையும் செய்ய மாட்டேன்" என கூறி சமாதான படுத்தினான். அதே போல, தன் மனைவி சொல் படி மட்டுமே வாழ்ந்து வந்தான். நாட்கள் ஓடின. செழிப்பான அந்த அழகிய நகரத்தை,  எதிரிகள் நோட்டம் இட ஆரம்பித்தனர். எப்படியும் அந்த நகரத்தை தன் வசப்படுத்த அவர்கள் நினைத்தனர்.

எதிரி நாட்டு மன்னன், அந்த அழகிய நகரத்தை எப்படி தன் வசப்படுத்துவது என யோசித்து கொண்டே இருந்தான். அப்போது, அந்த எதிரி மன்னனிடம், அவனை விட வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, அந்த நகரத்தை கைப்பற்ற உதவுவதாக கூறிக்கொண்டு வந்தாள். ஏற்கனவே அவனும் புரஞ்சரன் ஆளும் நகரத்தை கைப்பற்ற யோசித்து கொண்டு இருந்த படியால், அந்த பெண்ணை தன் திட்டத்தில் சேர்த்து கொள்ள முடிவு செய்தான். மேலும் அந்த பெண், அந்த எதிரி நாட்டு மன்னனிடம் தன்னை மணமுடித்து கொள்ளும் படியாக கேட்டு கொண்டாள். ஆனால் அவன், "உன்னை என்னால் மணம் செய்து கொள்ள இயலாது, ஆனால் என் தம்பியை உனக்கு கொடுக்கிறேன், கூடவே 360 வீரர்களை கொண்ட படையும் உனக்கு தருகிறேன். இவற்றை கொண்டு, புரஞ்சரன் வசிக்கும் நாட்டின் மீது படை எடுத்து எனக்கு வெற்றியை பெற்று தா" என கூறினான். இதற்கு ஒரு மனதாக, அந்த வயது முதிர்ந்த பெண்ணும் சம்மதித்தாள். தனக்கு அளிக்கப்பட்ட புது படைகளை பார்த்த அவளுக்கு, ஆச்சர்யமாக இருந்தது. காரணம், அந்த படை வீரர்கள், தன் உடம்பில் பாதி வெள்ளையாகவும், பாதி கருப்பாகவும் இருந்தனர். ஆக ஒரு வழியாக, புரஞ்சரனை வீழ்த்தும் திட்டம் தயார் ஆனது.

முதலில், 360 பேர் கொண்ட படை வீரர்கள் போருக்கு முன் நின்றனர். பின் அந்த முதியவளும், எதிரி நாட்டு மன்னனின் தம்பியும் போர்க்களத்தில் நின்றனர். இந்த போர்க்காட்சியை சற்றும் எதிர் பார்த்திராத, புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுந்த சோகம் அடைந்தனர். தனது மந்திரியின் துணையுடன், அவர்களும் போர்க்களத்தில் இறங்கினர். போர் வெகு நாட்கள் நடந்தன. முதலில் 360 போர் வீரர்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தனர். பின் அந்த முதியவளும் அவளது புது கணவனான, எதரி நாட்டு மன்னனின் தம்பியும், அந்த நகரத்தை அடைந்தனர். கடைசி வரையில் புரஞ்சரனின் மந்திரி மட்டும், சற்றும் தளராது போர் செய்து கொண்டு இருந்தார். இறுதியில், எதிரி நாட்டு மன்னனும் போர்க்களத்தில் நுழைந்து, புரஞ்சரனின் நகரத்தை கை பற்றினர். அந்த ஊரை விட்டு, புரஞ்சரன் மற்றும் அவனது மனைவியை துரத்தி அடித்தனர்.

தனது நகரத்தை இழந்த புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுத்த கஷ்டங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்கள் இருவரும், இணை பிரியாமல் பல பிறவிகள், இறந்தும்-பிறந்தும்-வாழ்ந்தும் வந்தனர். புரஞ்சரன், பிறவிகள் செல்ல செல்ல தான் செய்யும் கர்மா காரணமாக, முன்பை இழிந்த பிறப்பாக எடுத்து வந்து இறுதியில் மிகவும் இழிவான பிறவியை எடுத்து, அப்போதும் தன் மனைவியை பிரியாமல் வாழ்ந்து வந்தான் (ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்து வந்தது, பந்தம்). இந்நிலையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் பூர்வ ஜென்மத்து சிநேகிதனான அவிக்ஞானனை தன் வழியில் கண்டான். அவிக்ஞானனும் தன் ஞானத்தால் நண்பன் புரஞ்சரனை அடையாளம் கண்டு விட்டான். அவிக்ஞானனை கண்ட புரஞ்சரன், "தன்னை எப்படியாவது உன்னுடனே சேர்த்துக்கொள் நண்பா" என அழுது புரண்டான்.
"நான் தான், உனக்கு அப்போதே எச்சரிக்கை விடுத்தேனே நண்பா. நீ தான் அதை கேட்கவில்லை. சரி, பரவாயில்லை" என்று கூறி, தன் நண்பன் புரஞ்சரனை, மீண்டும் பழைய நிலைக்கே தன்னுடைய சக்தியால் மாற்றி தன்னுடன் சேர்த்து கொண்டான், அவிக்ஞானன்.

இவ்வாறு இந்த கதை முடிவு பெறுகிறது. இந்த கதையை வெறுமனே கேட்டால், இதில் என்ன பெரிய கருத்து அடங்கியுள்ளது என தோன்றும். இந்த கதையை "ஸ்ரீ மத் பாகவதத்தில்" குறிப்பிட காரணம் என்ன? வெறும் இருவரின் கதையை, இறைவன் சம்பந்தபட்ட புராணம் ஏன் குறுப்பிட வேண்டும்?

இந்த கதைக்கான விளக்கத்தை நாரதரே குறிப்பிடுவதாக, வியாசர் கூறியுள்ளார். இந்த கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும், உண்மையில் வெறும் மனிதர்கள் அல்ல. உண்மையில் அவை மற்றொன்றின் உருவகங்கள். அவை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

புரஞ்சனன் - ஆத்மா
அவிக்ஞானன் - பரமாத்மா (பகவான்)
9 வாசல் கோட்டைகள் கொண்ட நகரம் - உடல் (9 துவாரங்களை உடையது)
நகரத்து ராணி - புத்தி 
5 தலை நாகம் - பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆளும் மனது 
வேட்டை - "கனவு" போன்ற புத்தியின் தொடர்பு இல்லமால் செய்யும் செயல்கள்
முதிய பெண் - மூப்பு (நோய்கள்) 
எதிரி நாட்டு மன்னன் - மரணம்
எதிரி நாட்டு மன்னனின் தம்பி - தைரியம் இன்மை 
360 படை வீரர்கள் - 360 நாட்கள் (வருடம் அல்லது காலம்)
புரஞ்சரனின் மந்திரி - மன உறுதி

இப்போது இந்த கதா பாத்திரங்களை, நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் ஆத்மாவாகிய நாம் எல்லோரும் ஒரு "புரஞ்சரன்" தான். அவிக்ஞானன் என்னும் பரமாத்மாவாகிய இறைவனிடம் நாம் எப்போதும் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளோம். இந்த உடல் மீதும், வெளி விஷயங்கள் மீதும் கொண்ட பற்று, நம்மை இறைவனிடம் இருந்து பிரித்து விட்டன. 9 துவாரங்களை உடைய உடல் என்னும் நகரத்தை ஆள்வதிலேயே நம் மனம் லயித்து விடுகிறது. "புத்தி", என்ற ராணியை பற்றி, உடல் என்னும் நகரத்தை கைப்பற்றுகிறோம். ராணியின், சொற்படி நாமும்(ஆத்மா), மயங்கி போய் கிடக்கிறோம். புத்தி சொல்லாத விஷயங்களை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, அது நம்மை எச்சரிக்கிறது. பின், எதிரிகளான நோயும், தைரியம் குறைவும், நம்மை தன் படைகளான காலத்தின் உதவியுடன் நெருங்குகிறது. 360 படை வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளுக்கு ஒப்பிட படுகின்றனர் (பண்டைய வேத காலங்களில் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே) . இந்த படை வீரர்கள், பகல்(வெள்ளை), இரவு(கருப்பு) என இரண்டு சம அளவு நிறங்களில் தன் தேகத்தை உடையவர்கள். இந்த படை வீரர்கள் ஒவ்வொருவராக நெருங்க நெருங்க, அதாவது நாட்கள் செல்ல செல்ல, அவர்கள் கூடவே, நோயும் , தைரியம் குறைவும் வருகிறது. கடைசி வரை போராடும் மன உறுதி என்னும் மந்திரியின் அழிவிற்கு பின் மரணம் என்னும் எதிரி நாட்டு ராஜா நம் உடலை வெல்கிறான். இவ்வாறு பல பிறவிகள் கடந்தாலும், இதே உயிர்-உடல் பந்தம் தொடர்கிறது. எப்போது நம்மால் எதுவுமே இயலாமல், என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் என்று நம் நண்பனிடம்(இறைவனிடம்) சென்று அடைக்கலம் புகுகிறோமோ, அன்று மீண்டும் கடவுளின் அனுகிரகத்தால், கடவுளிடம் இணைகிறோம். இவ்வாறு இணைந்தவன், மீண்டும் வேறு ஒரு ராணி(உடல்) இடம் மயங்குவது இல்லை. இந்த நிலையே, ஒவ்வொரு பிறப்பிற்குமான இறுதி நிலை (முக்தி நிலை).

இந்த கதைக்கு நாரதர் கொடுத்த விளக்கம் மதங்களுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவைகள் என நினைக்கிறேன். இவ்வாறான கதைகளை கேட்கும் போது, மிகவும் சாதாரணமாக நமக்கு பட்டாலும் அவற்றில் பல உள் கருத்துக்கள் சூட்சமமாக பொதிக்கபட்டுள்ளன.

2) கஜேந்திர மோக்ஷம்

இந்த கதைக்கு "அறிமுகம்" தேவை இருக்காது என நினைக்கிறேன். குழந்தைகள் கூட முதலையிடம் சிக்கிய யானையின் கதையான இந்த கஜேந்திர மோக்ஷம், பற்றி அறிந்து இருக்கக்கூடும். இது மிகவும் சிறிய மற்றும் எளிய கதைதான். இனி கதையை பார்ப்போம்.

கஜேந்திரன் என்ற மிகவும் வலிமை பொருந்திய யானை ஒன்று, ஒரு காட்டில் தன் யானை கூட்டங்களுடன் வசித்து வந்தது. யானை கூட்டத்துக்கே தலைவன் ஆன அந்த யானை மிகவும் சந்தோசமாக, தன் புஜ பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தது. ஒரு நாள், தன் கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளுடன் களியாட்டம் போட்டு கொண்டே ரம்மியமான ஒரு குளத்தின் அருகே வந்தது.  அந்தி சாயும் நேரம். மலை அடிவாரத்தில் அமைந்து இருந்த அந்த குளத்தை சுற்றியும் இருந்த பூத்து குழுங்கிய சோலைகள் கஜேந்திரனின் மனதை பறித்தன. அருகில் இருந்த அழகான பெண் யானைகளுடன் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்த படி விளையாடி மகிழ்ந்தது. அப்போது, அந்த குளத்தில் பூத்து இருந்த அழகான தாமரை பூ, கஜேந்திரனின் கண்ணில் பட்டது. அதை பறித்து கொண்டு வந்து விட்டால், மற்ற பெண் யானைகள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்தது. உடனே குளத்தில் காலை வைத்து, இறங்க ஆரம்பித்தது. காத்து கொண்டு இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலை பிடித்து விட்டது. முதலில் இந்த சின்ன முதலை, என்னை என்ன செய்து விடும் என்று மிகவும் அலட்சியமாக நினைத்தான், கஜேந்திரன். பின்பு மெல்லமாக, முதலையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சி செய்தான். நிலைமையின் மோசத்தை அறிந்த கஜேந்திரன், மிகவும் முயற்சியுடன் போராட ஆரம்பித்தான். கூடவே இருந்த யானைகளால் எந்த உதவியும் கஜேந்திரன்னுக்கு செய்ய இயலவில்லை. போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டம், தேவர்களின் நாட்கணக்கில் 100  வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. தேவர்களின் 1 நாள் என்பது, நம்முடைய நாட்கணக்கில் 1 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நம்மால் எதையுமே செய்ய இயலாது என கஜேந்திரன் உணர்ந்தான். அவன், இறைவனை நோக்கி "உன் உருவம் எப்படி பட்டது என எனக்கு தெரியாது. உண்மையில் இந்த லோகங்கள் அனைத்திற்கும் உரியவன் ஆன இறைவனே நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆராதிக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்றுக இறைவா!" என இறைவனிடம் சரண் அடைந்தது.

இதனை கண்ட, விஷ்ணு பெருமாள், உடனடியாக தன் கருட வாகனத்தில் ஏறி புறப்பட்டார். கருடனின் வேகம் போதாத படியால், தானே கருடனையும் தூக்கி கொண்டு அந்த குளக்கரைக்கு வந்து சேர்ந்தார். தன் சக்ராயுதத்தை வீசி, முதலையின் பிடியில் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார். பின் கஜேந்திரனுக்கு பனி விடைகளும் செய்தார். இவ்வாறாக இந்த கஜேந்திர மோக்ஷம் கதை நிறைவு பெறுகிறது.

இந்த கதையை கேட்டவுடன் ஒரு சில சந்தேகங்கள் எனக்கு வந்தன. அவை,

  • கஜேந்திரனுக்கும், முதலைக்கும் இடையில் 100 தேவ வருடங்கள் போராட்டம் நடந்ததாக ஸ்ரீ மத் பாகவதம் குறிப்பிடுகிறது. உண்மையில் ஒரு யானையோ அல்லது முதலையோ அத்தனை காலம் வாழ முடியுமா?
  • கஜேந்திரன், முதலை இடம் சிக்கியவுடனேயே, பெருமாள் வந்து காத்து இருக்கலாம். ஆனால், இத்தனை காலங்கள் பொறுமையாக இருந்து விட்டு பின்பு அவசர அவசரமாக வந்து காத்தது, ஏன்? 
இந்த இரண்டு சந்தேகங்கள் என் மனதில் எழுந்தது. அதற்கு அருமையான ஒரு விளக்கத்தை கேட்டு அறிந்தேன். இந்த கதையிலும், ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மற்றொரு பொருளுக்கு உவமை ஆகவே அமைக்கப்பட்டுள்ளன. 

கஜேந்திரன் - பிறவி
மற்ற யானைகள் - நாம் அல்லாத பிறர் (மற்ற ஜீவன்களின் பிறவிகள்) 
முதலை - காலம்
கருடன் - வேதம்


அதாவது, ஒவ்வொரு பிறவி காணும் போதும் கஜேந்திரன் போல, நாம் நம் புஜ பலத்தை நம்பிக்கொண்டு, நாமே எல்லா செயல்களுக்கும் காரணம் என்ற மனப்பாங்குடன், "அகங்காரம்" கொண்டு செயல் படுகிறோம். காலம் என்னும் முதலை, நம்மை பிடித்து "மரணம்" என்னும் நிகழ்ச்சியை (காலை பிடித்தல்) நிகழ்த்தி விடுகிறது. எனினும், பல பிறவிகளில் நாம் காலத்தை வெல்லும், இறுமாப்புடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். இதுவே "100 தேவ வருடங்களுக்கும் மேலாக" என்ற கருத்தின் மையம் ஆகும். அதாவது பல லட்சம் பிறவிகள் எடுத்தும் நாம் காலத்துடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை யானைகளுக்கு தலைவன் என்ற போதும், அவர்கள் நம் மரணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போய் விடுகிறது.

என்று நாம், "நம்மால் இனி எதையும் சாதிப்பது முடியாது" என்று இறைவனிடம் சரண் அடைகிறோமோ அன்று தான், இறைவன் நமக்கு தென் படுகிறான். அதாவது, நம் அகங்காரம் என்னும் திரை நம்மை விட்டு விலகும் போது மட்டுமே இறைவன் நமக்கு தென்படுகிறான். இறைவன் தென் படுவது என்பது நம் ஆத்மாவின் சுய தரிசனம் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் வேதங்களின் (நல்ல நெறி முறைகள்) சாட்சி கொண்டே இறைவன் நம்மை முதலை என்னும் காலத்தின் பிடியில் இருந்து ரட்சிக்கிறான். இவ்வாறு கஜேந்திர மோக்ஷம் கதையும் உள்ளூடாக பல உள் கருத்துகளை கொண்டு உள்ளது.


கதைகள் சிலவற்றை கேட்கும் போதே, அவைகளின் உள்கருத்துகள் நமக்கு விளங்கி விடும். ஆனால், சில கதைகளை கேட்கும் போது வேடிக்கையாகவும், நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் அவ்வாறான புராண கதைகள் கூட, உள்ளூர ஏதோ மற்றொன்றை உருவகமாக சொல்ல நினைத்து அமைக்க பட்டு இருக்கலாம். உதாரணத்திற்க்கு, மகா பாரத கதையில் பஞ்ச பாண்டவர்கள் 5 பேர் தான். ஆனால் கௌரவர்கள் 100 பேர். கடைசியில் பாண்டவர்களே வென்றார்கள். உண்மையில் இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். நல்ல பண்புகள், உண்மையில் கெட்ட பண்புகளை விட எண்ணிக்கையில் குறைவு தான். ஆனாலும் இறைவன் நல்ல பண்புகளுக்கு மட்டுமே துணை செய்து கடைசியில் அவைகளுக்கு வெற்றியை கொடுப்பான். இவ்வாறு, கதைகளை அதன் உள்நோக்கம் என்ன என்று அலச முயன்றால் பல அறிய தத்துவங்கள் நமக்கு கிடைக்கலாம்.

இனி வெறுமனே, புராண கதைகளை கேலி செய்து சிரிப்பவர்களுக்கு இடையில் நாம் இருந்தாலும், அது ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என சிந்தித்து பார்க்க முற்படுவோம்.

2 comments:

Search This Blog