Friday, September 17, 2010

ஒரு தத்துவ தரிசனம் - ஸ்ரீ மத் பாகவத கதைகள்

கதைகளை பார்ப்பதும், படிப்பதும், கேட்பதும் மற்றும் சொல்லுவதும் நமது முன்னோர் நமக்கு கற்று தந்த பாடங்களில் மிகவும் அனுபவ பூர்வமானவைகள். அறிவுரைகளையோ அல்லது சிறந்த செய்திகளையோ வெறுமனே மற்றவர்களுக்கு சொல்லும் போது அவை வெகுவாக ஈர்ப்பதில்லை. அதையே கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு கதையாக்கி, சொல்லும் பொழுது மனதில் வெகு விரைவில் பதிகிறது. சிறுவயதினருக்கு, ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் ஒரு நுட்பமான கருவிகளாக இந்த கதைகள் இருந்து வருகின்றன. பண்டைய காலம் தொட்டே, கடினமான அல்லது முக்கியமான ஒரு விஷயத்தை எளிதாக மற்றவர்களுக்கு கதைகள் மூலம் விளக்கும் கலையை நம் முன்னோர்கள் நன்கு கற்று அறிந்திருக்கிறார்கள். புராணம், இதிகாசம் போன்றவைகள் இதற்கு நல்ல உதாரணங்கள். கதைகள், குழந்தைகளை தூங்க வைப்பதோடு  நில்லாமல், தூங்கி கொண்டு இருக்கும் சில நல்ல உணர்வுகளையும் தட்டி எழுப்பும் பொறுப்பையும் கொண்ட கலைகள் என்றே சொல்லலாம்.

உலகில் உள்ள எல்லா மதங்களும், "கதைகள்" என்னும் கலையையே கையில் எடுத்து அவற்றை பரப்பி வந்துள்ளன. பல முனிவர்கள், நமக்கு கற்று கொடுக்க விரும்பிய வாழ்க்கை பாடங்களை கதைகளாக்கி  அதன் மூலம் தான் கூற விரும்பும் கொள்கைகளையும், நெறி முறைகளையும் கூறி வந்துள்ளனர். இதில் இந்து மதத்தில், "வியாசர்" என்னும் முனிவர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார். "மஹா பாரதம்" என்ற இதிகாசத்தையும், 18 புராணங்களையும் நமக்கு அளித்ததோடு அல்லாமல், வேதங்களையும் செவ்வனாக 4 பிரிவுகளாக பிரித்து வழங்கிய பெருமையும் உடையவர். அவர் எழுதிய மற்றும் புராணங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த புராணமாகவும்  கருதப்படும் "ஸ்ரீ மத் பாகவதம்" என்னும் புராணத்தில் வரும் "புரஞ்சரனோ பாக்யானம்" மற்றும் "கஜேந்திர மோக்ஷம்" என்னும் கதைகளை நான் ஒரு ஒலி நாடாவில் சமீப கால கட்டத்தில் கேட்டு அறிந்தேன். அந்த கதைகள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன கதைகளாக இருப்பினும், ஒரு புதிய கோணத்தில் அந்த கதைகள் அலசப்பட்டு இருப்பதை நான் உணர்ந்தேன். அதை இந்த பதிவு மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்.


1) புரஞ்சரனோ பாக்யானம்

புரஞ்சரனோ பாக்யானம் என்ற இந்த கதையை ஒரு சிலர் மட்டுமே அறிந்து இருக்கக்கூடும் என கருதுகிறேன். இந்த கதையை "நாரத மகரிஷி" விளக்கம் அளிக்கும் கதையாக வியாசர் சித்தரித்து உள்ளார். இனி கதையை பார்ப்போம் (இல்லை படிப்போம்).

முன்பொரு காலத்தில் "புரஞ்சரன்" மற்றும் "அவிக்ஞானன்" என்ற இரு பேர்கள், இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர். புரஞ்சரனை காட்டிலும், அவிக்ஞானன் சிறந்த ஞானத்தை உடையவனாக இருந்தான். அவர்கள் இருவரும் எந்த விதமான கவலையும் இன்றி ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வந்தனர். ஒரு நாள், அவர்களுடைய பயணத்தின் இடையில் ஒரு அழகான ஊரை பார்த்தனர். "9" வாசல் கோட்டைகளை கொண்டு, அந்த ஊர் கம்பீரமாக காட்சி அளித்தது. அங்கே, மிகவும் அழகான ஒரு பெண், 5 தலை நாகத்தை குடையாக கொண்டு, அம்சமாக நடந்து வரும் காட்சியை கண்டனர். அந்த நகருக்கு ராணியான அவளின் அழகில் "புரஞ்சரன்" மயங்கி போனான். அவளை கல்யாணம் செய்து கொண்டு அந்த நகரத்திற்கு ராஜாவாகி, அங்கேயே தங்கி விடுவது என்று முடிவு செய்தான். புரஞ்சரனை கண்ட அந்த ராணியும், அவன் அழகில் மயங்கி போனாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி, முழு மன திருப்தியுடன் வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத நண்பன் "அவிக்ஞானன்", இதனை கண்டு மிகவும் ஆச்சர்யம் அடைந்தான். தன் நண்பன் புரஞ்சரனிடம், "நன்றாக யோசித்து கொள் நண்பா, இது உண்மையிலேயே உனக்கு தேவை தானா?" என்று கேட்டான். ஆனால் புரஞ்சரனின் அளவு கடந்த ஆசையை கண்டு, நண்பன் அவிக்ஞானன், அவனுக்கு அந்த ராணியை மனம் செய்து வைத்து விட்டு, தனியாக புறப்பட தயார் ஆனான். இப்படி புரஞ்சரனுக்கும், அந்த அழகு மங்கைக்கும் திருமணம் நடந்தது.

அவர்கள் நீண்ட காலம் வெகு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அந்த ராணி, எதை சொன்னாலும் மறுக்காமல் அதை புரஞ்சரன் செய்து வந்தான். இடையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் மனைவியிடம் சொல்லாமல் வேட்டைக்கு சென்று வந்தான். அதை கேள்வி பட்ட ராணி, தலைவிரி கோலமாய் கூச்சலிட ஆரம்பித்தாள். "தன்னிடம் கேட்காமல் வேட்டைக்கு மட்டும் அல்ல, இனி எதையும் செய்ய கூடாது" என அழுது ஆர்ப்பாட்டம் இட்டாள். திகைத்து நின்ற புரஞ்சரன், "இனி உன்னை கேட்காது எதையும் செய்ய மாட்டேன்" என கூறி சமாதான படுத்தினான். அதே போல, தன் மனைவி சொல் படி மட்டுமே வாழ்ந்து வந்தான். நாட்கள் ஓடின. செழிப்பான அந்த அழகிய நகரத்தை,  எதிரிகள் நோட்டம் இட ஆரம்பித்தனர். எப்படியும் அந்த நகரத்தை தன் வசப்படுத்த அவர்கள் நினைத்தனர்.

எதிரி நாட்டு மன்னன், அந்த அழகிய நகரத்தை எப்படி தன் வசப்படுத்துவது என யோசித்து கொண்டே இருந்தான். அப்போது, அந்த எதிரி மன்னனிடம், அவனை விட வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, அந்த நகரத்தை கைப்பற்ற உதவுவதாக கூறிக்கொண்டு வந்தாள். ஏற்கனவே அவனும் புரஞ்சரன் ஆளும் நகரத்தை கைப்பற்ற யோசித்து கொண்டு இருந்த படியால், அந்த பெண்ணை தன் திட்டத்தில் சேர்த்து கொள்ள முடிவு செய்தான். மேலும் அந்த பெண், அந்த எதிரி நாட்டு மன்னனிடம் தன்னை மணமுடித்து கொள்ளும் படியாக கேட்டு கொண்டாள். ஆனால் அவன், "உன்னை என்னால் மணம் செய்து கொள்ள இயலாது, ஆனால் என் தம்பியை உனக்கு கொடுக்கிறேன், கூடவே 360 வீரர்களை கொண்ட படையும் உனக்கு தருகிறேன். இவற்றை கொண்டு, புரஞ்சரன் வசிக்கும் நாட்டின் மீது படை எடுத்து எனக்கு வெற்றியை பெற்று தா" என கூறினான். இதற்கு ஒரு மனதாக, அந்த வயது முதிர்ந்த பெண்ணும் சம்மதித்தாள். தனக்கு அளிக்கப்பட்ட புது படைகளை பார்த்த அவளுக்கு, ஆச்சர்யமாக இருந்தது. காரணம், அந்த படை வீரர்கள், தன் உடம்பில் பாதி வெள்ளையாகவும், பாதி கருப்பாகவும் இருந்தனர். ஆக ஒரு வழியாக, புரஞ்சரனை வீழ்த்தும் திட்டம் தயார் ஆனது.

முதலில், 360 பேர் கொண்ட படை வீரர்கள் போருக்கு முன் நின்றனர். பின் அந்த முதியவளும், எதிரி நாட்டு மன்னனின் தம்பியும் போர்க்களத்தில் நின்றனர். இந்த போர்க்காட்சியை சற்றும் எதிர் பார்த்திராத, புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுந்த சோகம் அடைந்தனர். தனது மந்திரியின் துணையுடன், அவர்களும் போர்க்களத்தில் இறங்கினர். போர் வெகு நாட்கள் நடந்தன. முதலில் 360 போர் வீரர்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தனர். பின் அந்த முதியவளும் அவளது புது கணவனான, எதரி நாட்டு மன்னனின் தம்பியும், அந்த நகரத்தை அடைந்தனர். கடைசி வரையில் புரஞ்சரனின் மந்திரி மட்டும், சற்றும் தளராது போர் செய்து கொண்டு இருந்தார். இறுதியில், எதிரி நாட்டு மன்னனும் போர்க்களத்தில் நுழைந்து, புரஞ்சரனின் நகரத்தை கை பற்றினர். அந்த ஊரை விட்டு, புரஞ்சரன் மற்றும் அவனது மனைவியை துரத்தி அடித்தனர்.

தனது நகரத்தை இழந்த புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுத்த கஷ்டங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்கள் இருவரும், இணை பிரியாமல் பல பிறவிகள், இறந்தும்-பிறந்தும்-வாழ்ந்தும் வந்தனர். புரஞ்சரன், பிறவிகள் செல்ல செல்ல தான் செய்யும் கர்மா காரணமாக, முன்பை இழிந்த பிறப்பாக எடுத்து வந்து இறுதியில் மிகவும் இழிவான பிறவியை எடுத்து, அப்போதும் தன் மனைவியை பிரியாமல் வாழ்ந்து வந்தான் (ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்து வந்தது, பந்தம்). இந்நிலையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் பூர்வ ஜென்மத்து சிநேகிதனான அவிக்ஞானனை தன் வழியில் கண்டான். அவிக்ஞானனும் தன் ஞானத்தால் நண்பன் புரஞ்சரனை அடையாளம் கண்டு விட்டான். அவிக்ஞானனை கண்ட புரஞ்சரன், "தன்னை எப்படியாவது உன்னுடனே சேர்த்துக்கொள் நண்பா" என அழுது புரண்டான்.
"நான் தான், உனக்கு அப்போதே எச்சரிக்கை விடுத்தேனே நண்பா. நீ தான் அதை கேட்கவில்லை. சரி, பரவாயில்லை" என்று கூறி, தன் நண்பன் புரஞ்சரனை, மீண்டும் பழைய நிலைக்கே தன்னுடைய சக்தியால் மாற்றி தன்னுடன் சேர்த்து கொண்டான், அவிக்ஞானன்.

இவ்வாறு இந்த கதை முடிவு பெறுகிறது. இந்த கதையை வெறுமனே கேட்டால், இதில் என்ன பெரிய கருத்து அடங்கியுள்ளது என தோன்றும். இந்த கதையை "ஸ்ரீ மத் பாகவதத்தில்" குறிப்பிட காரணம் என்ன? வெறும் இருவரின் கதையை, இறைவன் சம்பந்தபட்ட புராணம் ஏன் குறுப்பிட வேண்டும்?

இந்த கதைக்கான விளக்கத்தை நாரதரே குறிப்பிடுவதாக, வியாசர் கூறியுள்ளார். இந்த கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும், உண்மையில் வெறும் மனிதர்கள் அல்ல. உண்மையில் அவை மற்றொன்றின் உருவகங்கள். அவை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

புரஞ்சனன் - ஆத்மா
அவிக்ஞானன் - பரமாத்மா (பகவான்)
9 வாசல் கோட்டைகள் கொண்ட நகரம் - உடல் (9 துவாரங்களை உடையது)
நகரத்து ராணி - புத்தி 
5 தலை நாகம் - பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆளும் மனது 
வேட்டை - "கனவு" போன்ற புத்தியின் தொடர்பு இல்லமால் செய்யும் செயல்கள்
முதிய பெண் - மூப்பு (நோய்கள்) 
எதிரி நாட்டு மன்னன் - மரணம்
எதிரி நாட்டு மன்னனின் தம்பி - தைரியம் இன்மை 
360 படை வீரர்கள் - 360 நாட்கள் (வருடம் அல்லது காலம்)
புரஞ்சரனின் மந்திரி - மன உறுதி

இப்போது இந்த கதா பாத்திரங்களை, நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் ஆத்மாவாகிய நாம் எல்லோரும் ஒரு "புரஞ்சரன்" தான். அவிக்ஞானன் என்னும் பரமாத்மாவாகிய இறைவனிடம் நாம் எப்போதும் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளோம். இந்த உடல் மீதும், வெளி விஷயங்கள் மீதும் கொண்ட பற்று, நம்மை இறைவனிடம் இருந்து பிரித்து விட்டன. 9 துவாரங்களை உடைய உடல் என்னும் நகரத்தை ஆள்வதிலேயே நம் மனம் லயித்து விடுகிறது. "புத்தி", என்ற ராணியை பற்றி, உடல் என்னும் நகரத்தை கைப்பற்றுகிறோம். ராணியின், சொற்படி நாமும்(ஆத்மா), மயங்கி போய் கிடக்கிறோம். புத்தி சொல்லாத விஷயங்களை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, அது நம்மை எச்சரிக்கிறது. பின், எதிரிகளான நோயும், தைரியம் குறைவும், நம்மை தன் படைகளான காலத்தின் உதவியுடன் நெருங்குகிறது. 360 படை வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளுக்கு ஒப்பிட படுகின்றனர் (பண்டைய வேத காலங்களில் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே) . இந்த படை வீரர்கள், பகல்(வெள்ளை), இரவு(கருப்பு) என இரண்டு சம அளவு நிறங்களில் தன் தேகத்தை உடையவர்கள். இந்த படை வீரர்கள் ஒவ்வொருவராக நெருங்க நெருங்க, அதாவது நாட்கள் செல்ல செல்ல, அவர்கள் கூடவே, நோயும் , தைரியம் குறைவும் வருகிறது. கடைசி வரை போராடும் மன உறுதி என்னும் மந்திரியின் அழிவிற்கு பின் மரணம் என்னும் எதிரி நாட்டு ராஜா நம் உடலை வெல்கிறான். இவ்வாறு பல பிறவிகள் கடந்தாலும், இதே உயிர்-உடல் பந்தம் தொடர்கிறது. எப்போது நம்மால் எதுவுமே இயலாமல், என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் என்று நம் நண்பனிடம்(இறைவனிடம்) சென்று அடைக்கலம் புகுகிறோமோ, அன்று மீண்டும் கடவுளின் அனுகிரகத்தால், கடவுளிடம் இணைகிறோம். இவ்வாறு இணைந்தவன், மீண்டும் வேறு ஒரு ராணி(உடல்) இடம் மயங்குவது இல்லை. இந்த நிலையே, ஒவ்வொரு பிறப்பிற்குமான இறுதி நிலை (முக்தி நிலை).

இந்த கதைக்கு நாரதர் கொடுத்த விளக்கம் மதங்களுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவைகள் என நினைக்கிறேன். இவ்வாறான கதைகளை கேட்கும் போது, மிகவும் சாதாரணமாக நமக்கு பட்டாலும் அவற்றில் பல உள் கருத்துக்கள் சூட்சமமாக பொதிக்கபட்டுள்ளன.

2) கஜேந்திர மோக்ஷம்

இந்த கதைக்கு "அறிமுகம்" தேவை இருக்காது என நினைக்கிறேன். குழந்தைகள் கூட முதலையிடம் சிக்கிய யானையின் கதையான இந்த கஜேந்திர மோக்ஷம், பற்றி அறிந்து இருக்கக்கூடும். இது மிகவும் சிறிய மற்றும் எளிய கதைதான். இனி கதையை பார்ப்போம்.

கஜேந்திரன் என்ற மிகவும் வலிமை பொருந்திய யானை ஒன்று, ஒரு காட்டில் தன் யானை கூட்டங்களுடன் வசித்து வந்தது. யானை கூட்டத்துக்கே தலைவன் ஆன அந்த யானை மிகவும் சந்தோசமாக, தன் புஜ பலத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வந்தது. ஒரு நாள், தன் கூட்டத்தில் உள்ள மற்ற யானைகளுடன் களியாட்டம் போட்டு கொண்டே ரம்மியமான ஒரு குளத்தின் அருகே வந்தது.  அந்தி சாயும் நேரம். மலை அடிவாரத்தில் அமைந்து இருந்த அந்த குளத்தை சுற்றியும் இருந்த பூத்து குழுங்கிய சோலைகள் கஜேந்திரனின் மனதை பறித்தன. அருகில் இருந்த அழகான பெண் யானைகளுடன் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்த படி விளையாடி மகிழ்ந்தது. அப்போது, அந்த குளத்தில் பூத்து இருந்த அழகான தாமரை பூ, கஜேந்திரனின் கண்ணில் பட்டது. அதை பறித்து கொண்டு வந்து விட்டால், மற்ற பெண் யானைகள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்தது. உடனே குளத்தில் காலை வைத்து, இறங்க ஆரம்பித்தது. காத்து கொண்டு இருந்த முதலை ஒன்று, கஜேந்திரனின் காலை பிடித்து விட்டது. முதலில் இந்த சின்ன முதலை, என்னை என்ன செய்து விடும் என்று மிகவும் அலட்சியமாக நினைத்தான், கஜேந்திரன். பின்பு மெல்லமாக, முதலையின் பிடியில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சி செய்தான். நிலைமையின் மோசத்தை அறிந்த கஜேந்திரன், மிகவும் முயற்சியுடன் போராட ஆரம்பித்தான். கூடவே இருந்த யானைகளால் எந்த உதவியும் கஜேந்திரன்னுக்கு செய்ய இயலவில்லை. போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டம், தேவர்களின் நாட்கணக்கில் 100  வருடங்களுக்கும் மேலாக நீடித்தது. தேவர்களின் 1 நாள் என்பது, நம்முடைய நாட்கணக்கில் 1 வருடம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நம்மால் எதையுமே செய்ய இயலாது என கஜேந்திரன் உணர்ந்தான். அவன், இறைவனை நோக்கி "உன் உருவம் எப்படி பட்டது என எனக்கு தெரியாது. உண்மையில் இந்த லோகங்கள் அனைத்திற்கும் உரியவன் ஆன இறைவனே நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆராதிக்கிறேன். தயை கூர்ந்து என்னை காப்பாற்றுக இறைவா!" என இறைவனிடம் சரண் அடைந்தது.

இதனை கண்ட, விஷ்ணு பெருமாள், உடனடியாக தன் கருட வாகனத்தில் ஏறி புறப்பட்டார். கருடனின் வேகம் போதாத படியால், தானே கருடனையும் தூக்கி கொண்டு அந்த குளக்கரைக்கு வந்து சேர்ந்தார். தன் சக்ராயுதத்தை வீசி, முதலையின் பிடியில் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார். பின் கஜேந்திரனுக்கு பனி விடைகளும் செய்தார். இவ்வாறாக இந்த கஜேந்திர மோக்ஷம் கதை நிறைவு பெறுகிறது.

இந்த கதையை கேட்டவுடன் ஒரு சில சந்தேகங்கள் எனக்கு வந்தன. அவை,

  • கஜேந்திரனுக்கும், முதலைக்கும் இடையில் 100 தேவ வருடங்கள் போராட்டம் நடந்ததாக ஸ்ரீ மத் பாகவதம் குறிப்பிடுகிறது. உண்மையில் ஒரு யானையோ அல்லது முதலையோ அத்தனை காலம் வாழ முடியுமா?
  • கஜேந்திரன், முதலை இடம் சிக்கியவுடனேயே, பெருமாள் வந்து காத்து இருக்கலாம். ஆனால், இத்தனை காலங்கள் பொறுமையாக இருந்து விட்டு பின்பு அவசர அவசரமாக வந்து காத்தது, ஏன்? 
இந்த இரண்டு சந்தேகங்கள் என் மனதில் எழுந்தது. அதற்கு அருமையான ஒரு விளக்கத்தை கேட்டு அறிந்தேன். இந்த கதையிலும், ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மற்றொரு பொருளுக்கு உவமை ஆகவே அமைக்கப்பட்டுள்ளன. 

கஜேந்திரன் - பிறவி
மற்ற யானைகள் - நாம் அல்லாத பிறர் (மற்ற ஜீவன்களின் பிறவிகள்) 
முதலை - காலம்
கருடன் - வேதம்


அதாவது, ஒவ்வொரு பிறவி காணும் போதும் கஜேந்திரன் போல, நாம் நம் புஜ பலத்தை நம்பிக்கொண்டு, நாமே எல்லா செயல்களுக்கும் காரணம் என்ற மனப்பாங்குடன், "அகங்காரம்" கொண்டு செயல் படுகிறோம். காலம் என்னும் முதலை, நம்மை பிடித்து "மரணம்" என்னும் நிகழ்ச்சியை (காலை பிடித்தல்) நிகழ்த்தி விடுகிறது. எனினும், பல பிறவிகளில் நாம் காலத்தை வெல்லும், இறுமாப்புடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். இதுவே "100 தேவ வருடங்களுக்கும் மேலாக" என்ற கருத்தின் மையம் ஆகும். அதாவது பல லட்சம் பிறவிகள் எடுத்தும் நாம் காலத்துடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை யானைகளுக்கு தலைவன் என்ற போதும், அவர்கள் நம் மரணத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போய் விடுகிறது.

என்று நாம், "நம்மால் இனி எதையும் சாதிப்பது முடியாது" என்று இறைவனிடம் சரண் அடைகிறோமோ அன்று தான், இறைவன் நமக்கு தென் படுகிறான். அதாவது, நம் அகங்காரம் என்னும் திரை நம்மை விட்டு விலகும் போது மட்டுமே இறைவன் நமக்கு தென்படுகிறான். இறைவன் தென் படுவது என்பது நம் ஆத்மாவின் சுய தரிசனம் என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் வேதங்களின் (நல்ல நெறி முறைகள்) சாட்சி கொண்டே இறைவன் நம்மை முதலை என்னும் காலத்தின் பிடியில் இருந்து ரட்சிக்கிறான். இவ்வாறு கஜேந்திர மோக்ஷம் கதையும் உள்ளூடாக பல உள் கருத்துகளை கொண்டு உள்ளது.


கதைகள் சிலவற்றை கேட்கும் போதே, அவைகளின் உள்கருத்துகள் நமக்கு விளங்கி விடும். ஆனால், சில கதைகளை கேட்கும் போது வேடிக்கையாகவும், நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் அவ்வாறான புராண கதைகள் கூட, உள்ளூர ஏதோ மற்றொன்றை உருவகமாக சொல்ல நினைத்து அமைக்க பட்டு இருக்கலாம். உதாரணத்திற்க்கு, மகா பாரத கதையில் பஞ்ச பாண்டவர்கள் 5 பேர் தான். ஆனால் கௌரவர்கள் 100 பேர். கடைசியில் பாண்டவர்களே வென்றார்கள். உண்மையில் இது நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். நல்ல பண்புகள், உண்மையில் கெட்ட பண்புகளை விட எண்ணிக்கையில் குறைவு தான். ஆனாலும் இறைவன் நல்ல பண்புகளுக்கு மட்டுமே துணை செய்து கடைசியில் அவைகளுக்கு வெற்றியை கொடுப்பான். இவ்வாறு, கதைகளை அதன் உள்நோக்கம் என்ன என்று அலச முயன்றால் பல அறிய தத்துவங்கள் நமக்கு கிடைக்கலாம்.

இனி வெறுமனே, புராண கதைகளை கேலி செய்து சிரிப்பவர்களுக்கு இடையில் நாம் இருந்தாலும், அது ஏன் அவ்வாறு சொல்லப்பட்டது என சிந்தித்து பார்க்க முற்படுவோம்.

Wednesday, June 23, 2010

ஆசை என்றொரு பூதம்


"ஆசையே அழிவுக்கு காரணம்". - இதை சொல்லாத ஆத்மஞானிகளே கிடையாது. பகவான் கிருஷ்ணரில் இருந்து, இயேசு, புத்தர், மஹாவீரர் என எல்லா பரமாத்மாக்களும், இந்த கருத்தை வலியுறுத்த தவறவில்லை.

ஆடம்பரமான உடைகள் அணிவதில் இருந்து, ருசியான உணவுகள், சொகுசு கார்கள், நகைகள், பதவி, பணம், பங்களா, அழகான பெண்கள், புகழ், ஏன் நல்ல பெயற்கும் கூட ஆசை படுபவர்களை, நம்மை சுற்றியும் பார்க்க முடிகிறது. எதற்கும் ஆசை படாதவர்கள் யாரேனையும் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட நடை முறையில் சாத்தியபடாத ஒன்று என்றே கூறலாம்.

அப்படி "ஆசை" இருந்தால் தான் என்ன? ஆசை தானே, மனிதனை ஒரு இலக்கை நோக்கி அடைய செய்யும் கருவி!. ஆம், ஆசை என்பது ஒரு நல்ல கருவி தான், நம் இலக்குகள் சரியாக இருக்கும் போது மட்டும்... "அத்தனைக்கும் ஆசைப்படு" என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். ஆனால் ஆசைகள் பரிசுத்தமாய் இருக்கட்டும் என்றும் ஒரு நிபந்தனை!. பள்ளியில் படிக்கும் மாணவன், தான் படித்து பெரிய டாக்டர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறான் என கொள்வோம். எதற்கு என்று கேட்டால், பொருளிள்ளதவர்களுக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு என்று கூறுகிறான். இந்த உயர்ந்த லட்சியம், அவன் மருத்தவன் ஆன பின்பும் தொடர்ந்தால், அவன் படிக்கும் போது கொண்ட "ஆசை", உண்மையிலேயே உயர்ந்தது எனலாம். ஆனால் எத்தனை ஆசைகள் இப்படி ஆரம்பித்த படியே நீடிக்கின்றன?.

"உயர்ந்த ஆசைகள்" என்பதை எப்படி வரையறுக்க முடியும்? பகவத் கீதை, புலன் இன்பங்களில், உயர்ந்த யோகி, பற்று (ஆசை) வைக்க மாட்டான் என்று கூறுகிறது. புலன் இன்பங்கள், மனதுடன் தொடர்பு உடையவை. மனதை கட்டுப்படுத்த முடியாதவனே, புலன் இன்பங்களில் ஆசை வைக்கிறான். இந்த ஐம்புலன்களை மகிழ்ச்சி படுத்தும் செயல்கள் ஆகிய பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல் மற்றும் தொடுஇன்பம் ஆகியவைகளை பொறுத்த ஆசை, தாழ்ந்தவைகள் என்று கூறப்படுகிறது. இந்த புலன் இன்ப ஆசைகள், எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என பகவத் கீதை கீழ் படி கூறுகிறது.

"த்யாயதோ விஷயான்பும்ஸ: ஸங்கஸ்தேக்ஷுபஜாயதே
ஸங்காத்ஸஞ்சயாதே காம: காமாத்க்ரோதோபிஜாயதே" (2.62 )

"க்ரோதாத்பவதி ஸம்மோஹா: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:
ஸ்ம்ருதிப்ரம்சாத் புத்திநாசோ புத்திநாசாத்ப்ர்ணச்யதி" (2.63)


சதா உலக விசயங்களை யோசித்து கொண்டு இருக்கும் மனிதனுக்கு அதில் பற்று உண்டாகிறது. பற்றினால் ஆசை (காம:) உண்டாகிறது. ஆசையினால் கோபம் உண்டாகிறது. கோபத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தால் நாம் பெற்ற "புத்தி" யில் நாசம் உண்டாகிறது. புத்திநாசம் (அறிவு அகன்ற நிலை) ஏற்பட்டவனுக்கு நன்மை எனபது ஏது?

இவ்வாறு, இந்த இரண்டு ஸ்லோகங்கள் பொருள் தருகின்றன. எத்தனை அழகான மற்றும் ஆழமான ஆராய்ச்சி!!!. அடிப்படையை ஆராய்ந்து அதன் முடிவு வரை விளக்குகிறது, இந்த ஸ்லோகங்கள். அக ஆராய்ச்சியில் நிலை கொண்டவன், உலக விஷயங்களுக்காக பெரிதாக அலட்டி கொள்வதில்லை. மேலும் அவன் தன் ஆத்ம சுகம் ஒன்றையே உயர்வென கருதுகிறான், போன்ற விளக்கங்கள் உண்மையில் உலக பொருட்களுக்கான ஆசைகள் துச்சமானவைகள் தான் என ஆணித்தரமாய் கூறுகிறது.

மேலும் ஆசையின் அடிப்படையான குணங்கள் என்ன என்றும், அது எங்கே குடி கொண்டுள்ளது என்றும் கூட கீதை தெளிவு பட கூறுகிறது.

"ஆவ்ருதம் ஜ்ஞானமேதென ஜ்ஞானினோ நித்யவைரிணா
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேன ச" (3.39)

"இந்திரியாணி மனோ புத்தி ரஸ்யாதிஷ்டானமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞானமவ்ருத்ய தேஹினம்" (3.40)


கீதை யை பொறுத்தமட்டில், ஆசை (காமம்) என்பது ஞானிகளின் பரம எதிரி என்று வர்ணிக்க படுகிறது. மேலும் ஆசை (காமம்) பெற்றுள்ள குணங்கள் என மூன்று விஷயங்கள் கூறப்படுகிறது. அவை : "நெருப்பிற்கு சமமானது", "விரும்பிய வடிவை பெற வல்லது" மற்றும் "ஒருபோதும் அடைவதால் திருப்தியுராதது அதாவது ஒருபோதும் முழுமை அடையாதது". (3.39)

"புலன்கள், மனம், புத்தி" இந்த மூன்றும் தான் ஆசையின் இருப்பிடங்கள். மேலும் ஆசையானது "மனம், புத்தி மற்றும் இந்திரியங்கள் (புலன்கள்)" ஆகியவற்றை ஆட்கொண்டு, ஞானம் எனும் பரம்பொருளை மறைத்து நிற்கின்றது. (3.40)

இந்த இரண்டு ஸ்லோகங்கள், ஆசையின் குணங்கள் மற்றும் இருப்பிடத்தை நமக்கு விளக்கமாக கூறுகிறது. நமது எதிரியின் குணங்கள் நமக்கு தெரிந்தால், அவனை எப்படி வீழ்த்தலாம் என்பது பற்றி தெளிவான வியூகம் அமைக்க முடியும். அது போல அவன் எங்கே இருக்கிறான் எனவும் தெரிந்து விட்டால், தாக்குவது மிக சுலபமாக கூடும். இந்த இரண்டு ஸ்லோகங்கள் அதற்குத்தான் வழி அமைத்து கொடுக்கிறது. ஞானியின் ஜென்ம விரோதியாக "ஆசை" கூறப்படுகிறது. மேலும் அதன் குணங்கள் தெள்ள தெளிவாக விவரிக்க படுகிறது. முதலில் நெருப்பினை போன்றது என்பதன் மூலம், அது அழிக்கும் தன்மையை பெற்று இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் நெருப்பு எரிவதற்கு பொருட்கள் கொடுக்கப்படும் வரையில் அது மேலோங்கி வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அது போல, ஆசையிடம், அது விரும்பும் பொருளை கொடுத்தாலும், அது இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். இரண்டாவதாக, ஆசை விரும்பிய வடிவை (காமரூபேண) பெற வல்லது என கூறப்படுகிறது. முதலில் "பொருளாசை" எனில், அதை அடக்கி விட்டாலும், "பெண்ணாசை", "புகழாசை", என பல புதிய வடிவில் வந்து நம்மை ஆட்கொள்ளும். எனவே, ஆசைக்கு விரும்பிய வடிவம் பெரும் குணம் உள்ளது எனப்படுகிறது. மூன்றாவதாக, ஆசை ஒரு போதும் திருப்தி அடையாதது என கூறப்படுகிறது. ஒருவன், சிப்பாயாக இருந்து, தளபதியாக வேண்டும் என்று ஆசை கொண்டால், அவன் தளபதியாக ஆகும் போது, அவன் மன்னனாக வேண்டும் என்று புது ஆசை, அதாவது திருப்தி அடையாமல் அடுத்த நிலை நோக்கிய ஆசை புகுந்து விடுகிறது. இப்படி ஆசையின் குணங்கள் விளக்க படுகிறது.

மேலும் ஆசை, எங்கு குடி கொண்டு இருக்கிறது என்றால், அது "புலன்கள்", "மனம்", "புத்தி" என்ற மூன்றின் மீதும் குடி கொண்டு இருக்கிறது. புலன்கள் என்பது நம் உடலின் அங்கங்கள். மனம் என்பது புலன்களை விட நுண்ணியது ஆனால் அதை விட சக்தி வாய்ந்தது. புத்தி, மனதை விட நுண்ணியது மற்றும் சக்தி வாய்ந்தது. எடுத்த எடுப்பில் சிகரத்தை தொட்டு விடுவதை முயற்சிப்பதை விட, படி படியாக செல்வது சிறந்தது. அது போல, முதலில் புலன்களை அடக்கி அதன் மூலம் மனம், புத்தி என்ற இரண்டையும் அடக்கலாம் என கூறப்படுகிறது. எப்படி, புகை சூழ்ந்து இருக்கும் நெருப்பினை காண முடியாதோ, அது போல, ஆசை சூழ்ந்து இருக்கும் ஞானத்தை காண முடியாது எனவும் கூறப்படுகிறது.

ஆசைகள், உண்மையில் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது, கோபம் வருகிறது. பின் அதன் வழியாக அனைத்து கெட்ட எண்ணங்களும், நம் உள் புக ஆரம்பிக்கின்றன. உலகெல்லாம் ஒளி விடும் சூரியனை, கையாலோ, பிற பொருட்களாலோ மறைக்க நினைப்பதை விட, நம் கண்களை மட்டும் மூடி கொள்வது புத்திசாலி தனம் அல்லவா. அது போல, ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட துடிப்பதை விட, ஆசைகளையே அடக்குவது தான் மிகவும் சிறந்தது என நினைக்கிறேன்.

தன் வாழ்நாளில் எப்படியாவது ஒரு சைக்கிள் மட்டும் வாங்கி விட்டால் போதும் என்ற ஒருவனது ஆசை, அடுத்து அவன் சைக்கிள் வாங்கிய பின், மோட்டார் சைக்கிள், கார் என அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. உண்மையில் அவனுக்கு மோட்டார் சைக்கிள் அல்லது கார்களுக்கான தேவை இல்லாவிடினும் அவற்றை அடைய நினைக்கும் ஆசையில், அவனே தன்னை துன்பத்தில் ஆட்படுத்தி கொள்ள விழைகிறான். இவ்வாறு தேவைக்கு மேல் உள்ள ஆசைகளின் பிடியில் சிக்காதவர்கள் உண்மையில் எத்தனை பேர்? ஆசைக்கு அளவு தான் ஏது?

வாழ்க்கையில் துன்பம் அற்று வாழ்வதற்கு, புத்தர் நான்கு உண்மை கோட்பாடுகளை குறிப்பிடுகிறார். அவை, 

  1. எல்லா உயிர்களும் துன்பத்தை உள்ளடக்கியவை.
  2. எல்லா துன்பங்களும், ஆசைகளில் இருந்து உண்டானவை. 
  3. எல்லா துன்பங்களும், ஆசைகளை அகற்றும் போது முடிகின்றன. 
  4. அதனால் எல்லா துன்பங்களுக்கும் முடிவு காண வழி (ஆசைகளை அகற்றுதல்) உள்ளது.

எத்தனை சிறந்த கருத்துகள்.

"ஆசையே அழிவு" என்று பரமாத்மா மகாவீரரும் குறிப்பிடுகிறார். அவர் ஒரு நாள், காட்டில் தவம் செய்து கொண்டு இருக்கும் போது, குளிரால் நடுங்கி கொண்டு இருந்த ஒரு ஏழையை பார்த்தார். தான் அணிந்து இருந்த வஸ்திரத்தின் பாதியை கிழித்து கொடுத்து அந்த எளியவனுக்கு உதவி செய்தார். அந்த ஏழை, மகாவீரர் அளித்த அந்த துணி மிகவும் விலை உயர்ந்தது என தெரிந்த கொண்ட படியால், மீதி பாதியையும் அவரிடம் இருந்து பெற்று விட வேண்டும் என ஆசை கொண்டான். மீதி பாதியை, அவரிடம் கேட்டு பெற்று விடலாம் என, மகாவீரர் இருக்கும் இடத்திற்கு சென்றான். அப்போது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அதிர்ஷ்ட வசமாக, மீதி பாதி துணியும் கீழே விழுந்து கிடந்தது. "கேட்டு பெற வேண்டும்" என்று கிளம்பியவன், ஆசை மிகுதியால், அவருக்கு தெரியாமலேயே அதை அடைந்து விட எண்ணினான். இங்கே, "அகங்காரம்", அல்லது "நற்பெயருக்கான ஆசை" புதிதாக அவனிடம் எட்டி பார்த்து விட்டது. அதாவது, "நான் இவரிடம் கேட்டு பெற வேண்டுமா?" என்ற அகங்காரமோ, அல்லது, "மறுபடியும் இவரிடம், மீதி துணியை கேட்டால், இவர் என்னை தப்பாக நினைக்க கூடும். எனவே தெரியாமல் எடுத்து சென்றால் அவர் என்னை தப்பாக நினைக்க மாட்டார்" என்ற "நற்பெயருக்கான" ஆசையோ அவனிடத்தில் புதிதாக தோன்றியது. எனவே, திருட துணிந்தான். திருடிய பின், காலில் முள் குத்தியதால் சத்தம் போட மகாவீரர் விழித்து கொண்டார். இந்நிலையில் சிறிதும் கோப படாத மகாவீரர், "இந்த மீதி பாதி துணியில் நான் கொண்ட ஆசை அல்லவா, இவனை திருடனாக மாற்றியது" என்று நினைத்து வருந்தினாராம். எத்தனை பெரிய ஞான நிலை!!!.

உண்மையில் ஆசைகளை, நாம் நமக்காக மட்டுமே உருவாக்கி கொள்வதில்லை. அவைகள் நம்மில் இருந்து நம் பரம்பரைகள், அல்லது நம்மை சார்ந்தவர்கள் என எல்லோரிடமும் விதைத்து கொண்டும் தான் இருக்கிறோம். நான் மருத்துவன் ஆக முடியவில்லை என்பவன், தன் மகனை எப்படியும் டாக்டர் ஆக்கி விட வேண்டும் என்ற முனைப்பில், சில தவறேனும் (பணம் கொடுத்து) செய்து தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்த்து விடுகிறான். ஆனால் உண்மையாக அந்த படிப்பை பெற வேண்டிய ஒரு மாணவனது ஆசைகள் அடக்கப்பட்டு, அங்கே அடுத்த ஆசைக்கான விதை விதைக்கப்படுகிறது. அந்த ஆசைகள் நிறைவேறாத மாணவன், அடுத்து தன் வாரிசு மூலம் விட்டதை அடைய நினைக்கிறான். அல்லது தன் நிலைக்கு மாற்றான ஒரு தவறான வழியை கையில் எடுத்து ஆசைகள் அடங்காத கோபத்தை பிறர் இடத்தில் காட்டுகிறான். எனவே ஆசை எந்த வகையிலும் நம்மை மட்டும் பாதிப்பவை அல்ல. அவைகள் பிறரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வல்லது. "கோபம், வக்கிரம் போன்ற புதல்வர்களை பெற்ற அன்னை - ஆசை" என்று ஒரு சொல்லும் உண்டு.

ஆசையை உண்மையில் அடக்குவது என்பது ஒரு மிக பெரிய கலை. இதை நம்மால் தனியே நின்று சாதிப்பது என்பது மிகவும் கடினம். "கடவுள் பக்தி" என்ற ஒரு நண்பனின் உதவி கொண்டே அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். நண்பர்களே, ஆசை என்பதே இல்லாத வாழ்க்கை வாழ முடியா விடினும், முடிந்த வரை தேவைகளுக்கு மட்டுமே ஆசை கொள்ள முயலுவோம். படிப்பதையும், நினைப்பதையும் செயல்முறை படுத்தும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் நமக்கு கொடுத்து துணை புரிவாராக ("தெய்வ பக்தி" இல்லாத நண்பர்கள் எனின் மன உறுதியை, இறைவன் என பொருள் கொள்க).

"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" (கிருஷ்ணா - கிருஷ்+ந. "கிருஷ்"- சுழற்சியான பிறப்புகள். "ந" - நிறுத்துபவன்)

Friday, May 28, 2010

ஸ்ரீ காலஹஸ்தி - காலம் கடந்ததால் அஸ்தி


திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்க படுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூற படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.

இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒரு நாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடை விடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவ பெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.

மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவ பெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒரு நாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.
  • இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களை களையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது. 
  • ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவ பெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து,  அதை இந்த தலத்தில் உள்ள சிவ பெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவ லோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்ற படுகிறார்.
  • இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:
    • நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)
    • ஆகாயம் - சிதம்பரம் கோவில் 
    • நீர் - திருவானைக்காவல் கோவில் 
    • நெருப்பு - திருவண்ணாமலை கோவில்  
  • "மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.
  • "ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு. 
இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜ கோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்க படும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்க பட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!. 

இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது. 

கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன். 

ஓம் நம சிவாய!...

Thursday, November 19, 2009

சிறந்த இந்தியன் - சச்சின்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்... கிரிக்கெட் உலகின் முடி சூட மன்னனாக திகழும் இவர், நிகழ்த்தி இருக்கும் கிரிக்கெட் சார்ந்த சாதனைகள் கிட்டத்தட்ட 70 க்கும் மேலாக நீண்டு கொண்டே செல்கிறது. அவற்றில் முக்கியமான சில உங்களின் பார்வைக்கு கீழே...

1 ) அதிக பட்சமான ஒரு நாள் ஆட்ட ஓட்டங்களை எடுத்தவர் (தற்போதைய கணக்கின் படி 17178  ஓட்டங்கள்)
2 ) அதிக பட்சமான ஒரு நாள் ஆட்டத்திற்கான சதங்களை எடுத்தவர் (இன்று வரை 45 சதங்கள்)
3 ) அதிக பட்சமான ஆட்ட நாயகன் விருது வாங்கியவர்
4 ) அதிக பட்சமாக 10 வருடங்களுக்கும் மேல் உலக தர வரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தவர்.
5 ) டெஸ்ட் போட்டிகளில் அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தவர் (தற்போதைய கணக்கில் 12777  ஓட்டங்கள்)
6 ) அதிக பட்சமாக ஒரு நாள் ஆட்டங்களில் 90 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து சதம் எடுக்காமல் ஆட்டமிழந்தவர் (17 முறை 90  ஓட்டங்களுக்கு மேல் பெற்று ஆனால் சதத்தை எட்டாமல் ஆட்டம் இழந்துள்ளார்.
7 ) அதிக பட்சமான தொடர் நாயகன் விருதுகள் (மொத்தம் 14)

இது போன்று இவரின் சாதனைகள், தனி மனிதனாக அல்லாமால் ஒவ்வொரு இந்தியனும் தன் காலரை தூக்கி பெருமை பேசி கொள்ளும் படியானவை. 1983 ம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை, முதல் முறையாக வென்று உலக நாடுகளின் கிரிக்கெட் அணிகளில் தனெக்கென்று ஒரு முத்திரையை பதித்தது. ஆனால் கிரிக்கெட் துறையையே சார்ந்த சில பேர் அல்லது கிரிக்கெட் விளையாட்டை தங்கள் நரம்புகளில் புகுத்திய சில பேர்களின் பார்வை மட்டுமே இந்திய அணியின் பக்கம் இருந்தது. இன்று உலக அளவில் அதிகமாக பொருள் ஈட்டும் (Sponsorship) அணிகளில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது. இந்த மாற்றம் கண்டிப்பாக, மக்கள் தொகையின் காரணமாக விளம்பர யுக்திக்கு பெரும் நிறுவனங்கள் பயன் படுத்தி கொள்ளும் நுட்பம் எனினும், இந்தியா சில தருணங்களில் உலக நாடுகளை தன் கிரிக்கெட் வலையால் ஈர்த்தே வந்துள்ளது. கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்களால் கொடுக்க முடியாத கவர்ச்சியினை  இந்திய அணிக்கு தொடக்கத்தில், கொடுத்ததில் "சச்சின் டெண்டுல்கர்" க்கு பெரும் பங்கு உள்ளது. இன்று டோனி, யுவராஜ் சிங், சேவாக் போன்ற பலர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டகாரர்களாக இருந்தாலும், 10 வருடங்களுக்கு முன், சச்சின் ஒருவரை நம்பி மட்டுமே ஆட்டங்களும், ரசிகர்களும் இருந்ததை மறக்க முடியாது. இன்று கிராம புறங்களில் கூட கிரிக்கெட் ஒரு இன்றி அமையாத ஒரு அங்கம் ஆனதற்கு, அதன் மேலான ஈடு பாடு அதிகரித்ததற்கான காரணங்களில் இன்றியமையாதவர் "சச்சின்". இவ்வாறு இவரின் பெயரை கிட்டத்தட்ட எல்லோருமே பெருமையாக பேசி கொண்டிருக்கும் வேலையில், இவர் மராத்திய மண்ணிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே சொந்தமானவர் என்பது எல்லா இந்தியர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கை என்றே கருதுகிறேன். இதை இவரே, இவர் வாய் பட கூறின், எதிர்ப்பவரும் இருப்பார்களோ? இருக்கிறார்கள், மும்பை மண்ணின் (மும்பை எங்க சார் இருக்கு?) மைந்தன் ஷிவ் சேனா கட்சியின் தலைவர்.

"பால் தாக்ரே" - இந்து மதத்தினை மையமாக வைத்து முஸ்லிம்களை எதிர்த்து குரல் கொடுப்பவராக இருந்து, பின் மராத்தியினரின் நல்வாழ்வு(?) க்காக பாடுபட்டு (பாடுபடுத்தி) வரும் தலைவர். இது போன்ற அரசியல் வாதிகள் "நம் இந்தியா" என்ற ஒருமை பாட்டினை வளர்க்கும் இடத்தில் இருந்து கொண்டு, கீழ் தரமாக இந்தியாவையே பிளவாக்கும் செயல்களை செய்து வருவது வேதனை அளிக்கும் செயல். நாம் மொழிகளில் பிரிந்திருந்தாலும், இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு உள்ளவர்களாகவே இருக்கிறோம். ஆனால் இன்றைய அரசியல் வாதிகள், மக்களிடையே பிரிவினை உண்டாக்கி அதில் உணர்ச்சி வசமான வசனங்கள் பேசி, கேவலமான அரசியல் பிழைப்பு பிழைக்கிறார்கள். தமிழன் என்ற முறையில் "தமிழ்நாடு" குறித்த பெருமைகள், பண்பாடுகள்  என்று அதன் புகழ் பாடுவதில் தப்பில்லை. ஆனால் தமிழன், என்று எதற்கு எடுத்தாலும் நம்மை பிரித்து வைத்து சுகப்படுவதில் எனக்கு உடன் பாடு இல்லை. ஒட்டு மொத்த இந்தியாவும், இந்திய குடிமகன் ஒவ்வொருவனுக்கும் தொடர்பு உடைய ஒன்று. இதில் மலையாளம் பேசுபவர்களுக்கு தமிழ் நாட்டில் இடமில்லை என்றோ, தமிழ் பேசுபவனுக்கு கர்நாடகவில் இடம் இல்லை என்றோ, குஜராத்தி பேசுபனுக்கு மகாராஷ்டிராவில் இடம் இல்லை என்றோ எவனும் சொல்லி விட முடியாது. நாம் எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியும் படியான சுதந்திரத்தை என்றோ பெற்று விட்டோம். இதில் எவனும், "தன்னுடையது" என்று பொதுவான எதையும் பிரிக்க முடியாது.

இன்றைய நிலையில், கருத்து சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். "வந்தே மாதரம்" என்ற பாடலையே புறக்கணிக்கும் படியான செயல்களை செய்யும் கீழ் நிலை அரசியல் தலை தூக்கி வருவதை ஆட்சியாளர்கள் (ம்ம்... செய்பவர்களே அவர்களாக இருந்தால்???) அடக்கி வைத்தே ஆக வேண்டும்.

"நான் மராத்தியன் என்பதை விட இந்தியன் என்பதில் அதிக பெருமை கொள்கிறேன்" என்ற சச்சின் டெண்டுல்கரின் சொற்கள் கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும், ஏன் ஒவ்வொரு மராத்தியனும் கூட பெருமை பட வேண்டிய ஒன்று. ஆனால், இது மராத்திய மக்களை புண்படுத்தும் படியான பேச்சு என்று "பால் தாக்கரே" வால் விமர்சிக்க பட்டிருப்பது கண்டிப்பாக வருத்தத்தை அளிக்கிறது. மேலும் "கிரிக்கெட்டை மட்டும் கவனித்து, அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் சச்சின் வராமால் இருப்பது நல்லது" என எச்சரிக்கை வேறு !!!.

எது அரசியல்? மராத்தியன், இந்தியன் அல்ல என்பது தான் இவர்களின் அரசியலா? அப்படியே இருந்தாலும், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இது ஜன நாயக உரிமை. அப்படி இருக்க, அரசியல் விசயங்களில் சச்சின் வர கூடாது என்று சொல்வதே, ஒரு ஜன நாயக அத்துமீறல். அவர் அவர் கருத்துகளை, சொல்வது தான் கருத்து சுதந்திரம். இதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

கிரிக்கெட்டில் சச்சின் நிகழ்த்திய சாதனைகள் அவரின் உழைப்பின் மூலம் கிடைத்தவை. அந்த உழைப்பின் உபரி பலன்களை, வெறும் எதிர்ப்பதின் மூலம் பெற்று விட நினைக்காதே...

சச்சின் ரசிகன், என்ற முறையில், நான் ஏற்கனவே பெருமை பட்டிருக்கிறேன். இன்று சச்சின், ஒரு சிறந்த "இந்தியன்" என்ற முறையிலும் பெருமை படுகிறேன். நீங்களும் சிறு வட்டத்தில் சிக்காமல், முடிந்த வரை பரந்த மனப்பான்மையுடன் இந்தியன் என்றே மார் தட்டி கொள்ளுங்கள். வந்தே மாதரம்!!!

Wednesday, November 4, 2009

மரணத்திற்கு பிறகு ???


"மரணம்" - எல்லா உயிர்களும் அடைய விரும்பாவிடிலும் பெற்றே ஆக வேண்டிய முடிவு.

உண்மையில் மரணத்தின் பின் என்னதான் ஆகிறோம்? இந்த கேள்விக்கு கண்டிப்பாக "அறிவியல்" இடமிருந்து பதிலை எதிர்பார்ப்பது இயாலாத ஒன்று என்று நினைத்த நான், சில ஆன்மிக புத்தகங்களை உதவிக்கு நாடினேன். பல்சுவையான பதில்கள் எனக்கு கிடைக்க ஆரம்பித்தன.

கிறித்துவ மதம் இதற்கு சொர்க்கம் (Heaven), நரகம் (Hell) என்ற இரு பிரிவுகளை கை காட்டியது. பாவம் (Sin) செய்தவர்கள் நரகம் சென்று பாவத்திற்கு ஏற்ற தண்டனைகளை பெறுவதாகவும், சொர்க்கம், புண்ணியங்களின் பலன்களை ஏற்கும் இடமாகவும் காட்ட பட்டது. இறைவனின் அருள் பெற்றவர்கள் அழிவில்லா தன்மை (Immortality) அடைவதாகவும் (சில குறுப்பிட்ட பிரிவினர் மட்டும் இதை நம்புகின்றனர்) உள்ளது. சொர்கமும், நரகமும் மறு பிறப்புக்கு முதற்பட்ட நிலைகளென குறுப்பிட படுகிறது.

இஸ்லாமிய மதமும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துகளையே சொல்வதாக கருதுகிறேன். இங்கே சொர்க்கம், "ஜன்னா" (Jannah) என்றும், நரகம் "ஜஹனம்" (Jahannam) என்றும் பெயரிட பட்டுருக்கிறது."மாலிக்" என்ற நபர், நரகத்தை (Jannah) பாதுகாப்பதாக குர்ர்-ஆன் கூறுகிறது. இங்கு எரிந்து கொண்டு இருக்கும் நரகமும், மிக கடுமையான குளிருடன் கூடிய நரகமும் என, 2 விதமான நரகங்கள் கூறபடுகிறது. மிகவும் மோசமானவர்கள் குளிர் நரகத்துக்கு செல்வதாக நம்ப படுகிறது (ஜில்லுனு ஒரு நரகம்???).

அடுத்து, இந்து மதத்தை அலச முயன்றேன். இதற்கு "கருட புராணம்" உதவியாக இருக்கும் என முதலில் அந்நூலை படிக்க தொடங்கினேன். இந்நூல், கருட பகவானின் கேள்விகளுக்கு, மஹா விஷ்ணுவே நேரடியாக பதிலை அளிப்பதாக, வியாச மாமுனி அவர்களின் சீடர்களுக்கு உரைத்த புராணம் என அறிந்தேன். "அந்நியன்" படத்திற்கு பிறகு, கருட புராணத்தை பற்றி தெரியாதவர்களும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை கண்டிப்பாக பெற்றிருக்க கூடும், என்னை போல். இந்த புராணம், எவை பாவங்கள் என்றும் அதற்கு ஏற்ற தண்டனைகளையும் விளக்குவதாக உள்ளது. மேலும், எமதர்மன், சித்திர குப்தன், விசித்திர குப்தன், எம தூதர்கள், தேவ தூதர்கள் போன்ற சில கதாபாத்திரங்களையும் நமக்கு அறிமுக படுத்துகிறது. மேலும் எமன், சித்திர குப்தன், விசித்திர குப்தன் போன்ற ஒவ்வொருவரையும் மகிழ்ச்சி படுத்தும் வேள்விகள், தானங்கள் போன்றவற்றையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும் துர் மரணம் அடைந்த உயிர்கள், நரகத்தேயே அடையும் என்றும், புண்ணியம் செய்தவர்கள் தேவ தூதர்களால் அழைத்து செல்ல படுவார்கள் என்றும், பாவம் செய்தவர்கள் எம தூதர்களால் அடித்து இழுத்து செல்ல படுவதாகவும் படித்தேன். நரகத்தில் கொடுக்க படுவதாக சொல்லப்படும் தண்டனைகள், கண்டிப்பாக யாரையும் பயமுறுத்தி விட கூடியவைகளாக உள்ளன. உதாரணமாக, பாவம் செய்தவர்கள் கிட்ட தட்ட ஒரு வருடம் வரையிலும் எம லோகத்திற்கு இழுத்து செல்ல படுவதாகவும், "பிண்டம்" என அந்த உயிருக்கு படைக்க படும் உணவை உண்டு அதன் மூலம் சிறுது சிறிதாக உடலை அடைந்து பின் எம லோகத்தை அடைவதாகவும், அதன் பின் அந்த கட்டுண்ட உடலுக்கே தண்டனைகள் கொடுப்பதாகவும் படித்தேன். இழுத்து செல்லும் வழி எங்கும், சில நரகங்களுக்கு உள்ளே அனுமதித்து அங்கே அவர்கள் சாப்பிட நேரம் ஒதுக்க படுவதாகவும், எம லோகத்தின் நுழைவு இடத்தில மிகவும் கொடிய துர்-நாற்றமுடைய ஆறு ஒன்றை கடக்க சொல்வாதகவும் படித்தேன். அதன் பின்னரே அவர்களின் உண்மையான தண்டனைகள் அவனுக்கு வழங்க படுகிறது. இவ்வாறு கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் என்னை ஆச்சர்யத்துக்கு உண்டாக்கியது, சொல்ல போனால் அதிர்ச்சிக்கு உண்டாக்கியது. இவை கற்பனைகளே என கொண்டாலும், இத்தனை கற்பனைகளுக்கு தலை வணங்கியே ஆக வேண்டும்.

புத்த மதமும், "எமன்" எனும் அரசனை கொண்டு மொத்தம் 10 அரசர்களால் "நரகம்" ஆள படுவதாக கூறுகிறது. மேலும் தேவர்கள், அசுரர்கள் போன்ற கருத்துகளும் இதில் உண்டு. எனவே புத்த மதமும் இந்து மதத்தின் சாரத்தேயே கூறுவதாக எடுத்து கொள்ளலாம்.

விவேகானந்தர், மரணத்தினை வித்தியாசமாக அலச முயன்றிருப்பதாக, அவரின் "மரணுத்துக்கு பின்னால்" என்ற புத்தகம் மூலம் உணர்ந்தேன். அவர் உடலையே மையாமாக கொண்ட மதங்களையும் (எகிப்து பகுதிகளில் இன்றளவும் உடல் உள்ளவரை மட்டுமே உயிர் இருக்கும் என்ற கருத்தினை மையமாக கொண்டு "Mummy" எனும் உடலை பாதுகாக்கும் முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் உள்ளனர்), உயிரையே (ஆத்மாவை) மையமாக கொண்ட மதங்களையும் அவர் ஆராய்கிறார். அவர் உடலை மையமாக கொண்ட மதங்கள் கூறும் விசயங்களில் உடன்பாடு இல்லாத நிலையை வெளிபடுத்தியும், மோட்சம் (முக்தி) என்ற ஒரு நிலைக்கே எல்லா உயிர்களும் பாடு படுகின்றன என்றும் அதில் விளக்கி உள்ளார். மேலும் கடவுளை அடையும், அதாவது கடவுளுடன் ஒன்றிணைதல் என்ற நிலை யோகங்களின் மூலம் பெறலாம் என்றும் கூறுகிறார். இதற்கு எல்லாம் அடித்தளமான  "பகவத் கீதை" யை அறிய அதற்குள் நுழைய ஆரம்பித்தேன்.

அங்கு ஆத்மாவுக்கு அழிவே இல்லை. அது என்று முக்தி நிலையை அடைகிறதோ அப்போது தான், மறு பிறவியில் இருந்து விடுதலை அடைகிறது. அதுவே ஒவ்வொரு உயிரின் இறுதி கட்ட குறிக்கோள் என்றும், மனித பிறவியே எல்லா பிறவியை விடவும் உயர்ந்தது எனவும் அறிவுரை படுத்தபட்டேன். முக்தி நிலை, இறைவனில் இரண்டற கலக்கும் நிலை எனும் கருத்தை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னரே பகவான் கிருஷ்ணர் கூறியிருப்பதையும், இங்கே கூறப்பட்ட விஷயங்கள் தான் மெருகேற்ற பட்டு பிற மதங்களில் (மற்ற மகா புருஷர்களால்) கூற பட்டிருக்கலாம் என எண்ண தோன்றியது. சுவாமி விவேகானந்தர் மற்றும் ராம கிருஷ்ண பரமஹம்சர் கூட இதே கருத்துகளையே செப்பனிடுவதாக தோன்றியது. எல்லோருக்கும் இறைவன் ஒருவனே அடைய தகுந்த உயர் நிலை என்பதே எல்லா மதத்தின் கருத்தாக எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணர் "நானே அதை அடைய ஒரே வழி" என்றும் கிறிஸ்துவும் "நானே உன் பாவங்களை போக்கி முழு நிலை அளிப்பேன்" என்றும், புத்தர், மகாவீரர், நபிகள் நாயகம் என எல்லோரும் இதையே (அடிப்படை) கூறுவதாக தோன்றியது.

இவ்வாறு சில ஆராய்ச்சிகளுக்கு பிறகு, பிறப்பும் இறப்பும் எதை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என கருத்துகளை மையமிட முயன்றேன். இதில் மையமாக கீழ் தந்த கருத்துகளை பார்க்கிறேன்.

"ஆத்மா"என்றும் மாசு படாத, அதாவது கரை படாத மற்றும் ஆக்கமும் அழிவும் இல்லாத நிலை. செய்த பாவங்கள், புண்ணியங்களை பொருத்து "ஆத்மா" அதன் அடுத்த உடலை தேர்ந்து எடுக்கிறது. அல்லது பிறவி எனும் பாவத்தில் இருந்து விடுபடுகிறது."ஆசை"யே அழிவுக்கு காரணம். ஆசையை கட்டுப்படுத்தியவன் எதற்கும் அடிமை அல்ல. அவன்
விரைவிலேயே பிறவி கடலின், கரையை காண்கிறான்.

இந்த குறுகிய கால ஆராய்ச்சிகள், இந்த தேடலில் கண்டிப்பாக முழு பதிலை தராது என உணர்ந்தேன். என் பார்வையில் மரணம் கூட ஒரு முடிவு அல்ல என்பது போன்ற எண்ணம் சற்றே தோன்றலாயிற்று. தற்கொலை செய்து கொள்பவர்கள், கண்டிப்பாக ஒரு இழிவான நிலையை மரணத்துக்கு அடுத்து பெறுவார்கள் என கிட்டத்தட்ட எல்லா மதமும் சொல்கின்றன. மரணம் எப்படி ஒரு பிரிவை, உறவினர்களுக்கு தருகிறதோ, அதே போன்று உடலை பிரிந்த ஆத்மாவும், பிரிவினையை உணருமா? இதற்கு இந்து மதத்தின் புனித நூலான "பகவத் கீதை", ஆத்மா எந்த பந்தங்களிலும் சிக்காது, ஆனால் பந்தங்களே இல்லாத வாழ்க்கை வாழும் வரை, விடுதலை அடைவதில்லை, என்பது போன்ற கருத்துகளை கொடுக்கிறது. உடல் ஒரு சட்டை க்கு ஒப்பிடப்படுகிறது. உயிர் மறு பிறவியின் மூலம் மற்றொரு சட்டையை மாட்டி கொள்கிறது. சட்டை கிழிந்ததை உடலுக்கு ஏற்பட்ட இழப்பு என்று கூற முடியாது. அது போல் உடல் பிரிந்ததை உயிரின் இழப்பு என்று கூற முடியாது என்பது தான் மைய கருத்து.

இது போன்ற ஆன்ம ரீதியான படிப்புகள், மனிதனை கண்டிப்பாக தவறுகள் செய்யும் போது எச்சரிக்கும் அற்புதமான நண்பர்கள். வாழ்க்கை, இறந்ததும் முடிந்து விடுகின்றது, எனவே இருக்கும் வரை "தவறுகள்" செய்தாவது அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் படியான நிலை, என்னை சற்று உறுத்தவே செய்தது.

எல்லா உயிர்களுமே ஒரே மாதிரியான ஆத்மாக்களை கொண்டதானால், "வைரஸ்" போன்ற  நுண்ணுயிரிகளும் மனிதனுக்கு ஒப்பிட தகுந்த உயிர்களே. கருட புராணம், 3 வகையான உயிர்களை பற்றி குறிப்பிடுகிறது. "குட்டிகள் ஈன்பவை", "முட்டைகள் மூலம் உயிர்ப்பவை", "வியர்வைகள் மூலம் (அல்லது இறந்த பொருளின் மூலம்) ஜனிப்பவை" என்பவை அவை மூன்றும். இதில் கிருமிகள் மூன்றாம் வகையை சேர்ந்தவையாக கொள்ளலாம். எனவே தன் தகுதிக்கு (பாவ, புண்ணியங்களுக்கு) ஏற்ப, ஆத்மா தேர்ந்தெடுத்த ஜனனங்கள் தான் எல்லாம் என எடுத்து கொள்ளலாம்.

இந்த சிறிய ஆராய்ச்சி எனக்கு மட்டும் அல்ல, படிக்கும் உங்களிலும் ஏதாவது ஒரு சிறிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கலாம்!!!. "பணம்", "பதவி", "புகழ்", "பங்களா", "மது", "மாது" என ஏதோ ஒன்றை லட்சியமாக கொண்ட நம்மை, "மரணம்" தன் சாட்டையால் அடித்து "நிலையானதை நீ தேடவில்லை" என்று கூறுகிறது.

"மரணம்" - எல்லோருக்கும் உண்டு. ஏன், பிரம்ம பகவானே மரணத்தை உடையவன் என்று வேதங்கள் கூறுகின்றன. மரணத்திற்கு அடுத்து ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்பியாவது, தவறுகள் செய்வதை குறைப்போம். பிற உயிர்களுக்கும் முடிந்த வரை நன்மைகள் செய்து அதில் ஆத்மசுகம் காண்போம். (Atleast Try பண்ணுவோம் பாஸ்)...

Thursday, October 1, 2009

ஆஸ்கார் நாயகன் ரஹ்மானின் மற்றொரு ஆங்கில படைப்பு


நம் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழை தமிழ் நாட்டில் கூட பேச மறுக்கும் ஆட்களின் மத்தியில் (யாரையும் குறிப்பா குறிப்பிடலை, வேணும்னா நான் இவங்களை தான் சொல்றேன்னு நீங்களே கற்பனை பண்ணிக்கோங்க !), தமிழை ஆஸ்கார் மேடையிலேயே உச்சரித்தவன் நம் பதிவின் நாயகன். இவரை அறியாத தமிழன், ஏன் இந்தியன் கூட இருக்கு முடியாது (அப்படி யாராவது இருந்தால் தயவு செய்து உங்க ரேஷன் கார்டு, இல்லன்னா இந்திய குடிமகன் என்பதற்கான ஆதாரத்தை அழித்து விடவும்).

"எல்லா புகழும் இறைவனுக்கே" என்று குர்-ஆன் இல் இருப்பதாக அறிவேன். ஆனால் இந்த வாக்கியத்தை எல்லாரும் அறிய செய்தவன் நம்மவன். முதல் படத்தின் மூலமாகவே, இந்தியாவின் மிக உயர்ந்த விருது என மதிக்கப்படும் தேசிய விருது பெற்றவர் நம் ஹீரோ. இனி மேல் கூட பொடி வெய்த்து கூறினால் கெட்ட வார்த்தைகள் தான் எனக்கு மிஞ்சும். நான் குறிப்பிடும் நாயகன், நம் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான். இவருடைய இசை பயணம் தொடங்கியதலிருந்தே என்னை போன்ற பலர் அவருக்கு ரசிகன், ஏன் அடிமை என்று கூட கூறலாம்.

இவர் "SLUMDOG MILLIONAIRE" என்ற படத்தின் மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கியது எல்லாருக்கும் தெரியும். அதில் ஜெய் ஹோ ! என்ற ஹிந்தி பாடலை உலகம் எங்கும் முனுமுனுக்க செய்தார். தற்போது "COUPLES RETREAT" என்ற ஆங்கில படத்தின் மூலம் மறுபடியும் ஹாலிவுட், அதாவது ஆங்கில படத்தில் இசை அமைத்ததோடு அல்லாமல், அதில் "குறு குறு" என தொடங்கும் தமிழ் பாடலை முதன் முதலில் ஆங்கில படத்தில் அறிமுகம் செய்துள்ளார். அருமையான இசையை தமிழ் பாட்டுக்கு கொடுத்ததோடு இல்லமால் அதை ஆங்கில படத்தில் கொடுத்து இருக்கிறார்.

இந்த பாடலின் வரிகள் (ஏதோ நான் கணித்த வரை), இதோ இங்கே,


"குறு குறு கண் கருவிலே, என்னை அவள் வென்றாலே,
குறு குறு கண் கருவிலே, என்னை அவள் தின்றாலே,

இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்,
இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்,

சிறு சிறு பெண் நிலவே, என் துணை ஆவாயோ?,
சிறு சிறு பெண் நிலவே, என் பசி தீராயோ?,


இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்,
இதோ இதோ அவள் என்னை பதம் பார்க்கிறாள்,

(WHISTLING)...

குறு குறு கண் கருவிலே, என்னை அவள் வென்றாலே,
குறு குறு கண் கருவிலே, என்னை அவள் தின்றாலே..."

இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய விரும்புவோர், கீழிட்ட வலையின் மூலம் செய்யாலாம்.

http://findtamilmp3.blogspot.com/2009/10/couples-retreat-mp3.html

Search This Blog